செய்திகள்

சாம்பார் ருசியாக இல்லை என்று மனைவியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை

Published On 2017-04-26 12:21 GMT   |   Update On 2017-04-26 12:22 GMT
கர்நாடகாவில் சாம்பார் ருசியாக இல்லை என்று மனைவியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தட்சண கன்னட மாவட்டம் பன்ட்வால் தாலுகா காவல படுவூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும் புத்தூர் தாலுகா பேரவே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வருடம் இனிமையான சென்று இவர்களுடைய வாழ்க்கை அதன் பிறகு கசக்க ஆரம்பித்தது

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி இரவு கூலி வேலைக்கு செய்து விட்டு வீட்டுக்கு வந்த சுரேசுக்கு லட்சுமி சாப்பாடு பரிமாறினார். அப்போது, சாம்பார் ருசியாக இல்லை என கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.அப்போது, சுரேஷ் மரக்கட்டையால் தலையில் அடித்ததில் லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

பின்னர், வீட்டின் பக்கத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் உடலை தூக்கி வீசி விட்டு தற்கொலை நாடகமாடினார். இதனை தொடர்ந்து கடப்பா போலீசார் கிணற்றில் இருந்து லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் அடித்து லட்சுமியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி தற்கொலை நாடகமாடிய சுரேசை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

பின்னர், இந்த வழக்கு விசாரணை மங்களூரு மாவட்ட 5-வது கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ராமச்சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சுரேஷ் மீதான குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மை என நிருப்பிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் ரூ. 6 ஆயிரம் அபராத கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அபராத கட்டணத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News