செய்திகள்

வத்தலக்குண்டுவில் 4 கோவில்களை உடைத்து கொள்ளை

Published On 2017-04-26 04:59 GMT   |   Update On 2017-04-26 05:00 GMT
வத்தலக்குண்டு அருகே அடுத்தடுத்து 4 கோவில்களில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் நகை, பணம் மற்றும் பூஜைப் பொருட்களை அள்ளிச் சென்றனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகில் உள்ள கீழக்கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை திருவிழா நடைபெற்றது. நேற்று மறு பூஜை நடத்தி இரவு 11.30 மணியளவில் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இப்பகுதியில் நேற்று மழையும் பெய்தபடி இருந்ததால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனை பயன்படுத்தி ஒரு கும்பல் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைக்க முயன்ற போது முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்து கோவிலில் இருந்த குத்துவிளக்கு, பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றனர்.

இக்கோவிலுக்கு அருகிலேயே ஒரு சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட சப்தகன்னிமார், பெரியகாண்டி அம்மன், பொன்னர்சங்கர், சீலக்காரி அம்மன் ஆகிய சாமிகள் வைத்து வழிபடும் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 6 பவுன் நகை உண்டியலில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோவிலில் இருந்த பூஜைப் பொருட்களை கொள்ளையடித்தனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி, காட்டேரி, பேரட்டல் ஆகிய சாமிகளின் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள்ளும் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த பூஜை பொருட்களையும், பொருட்களையும் அள்ளிச் சென்றனர். அங்கிருந்த உண்டியலையும் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இதற்கு அருகிலேயே மேலக்கோவில் பட்டியில் உள்ள ரனகாளியம்மன் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலையும் மேலும் சில பொருட்களையும் கொள்ளையடித்தனர்.

இது மட்டுமின்றி அதே பகுதியில் இளவரசன் என்பவர் பேரூராட்சி பிட்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த போது வீட்டுக்குள் யாரோ வருவது போல் இருக்கவே திடுக்கிட்டு எழுந்தார். அப்போது வீட்டில் இருந்த 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிக் கொண்டு மர்ம நபர் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றார்.

4 கோவில்களிலும் கைவரிசை காட்டிய கும்பல் தாங்கள் கொண்டு சென்ற பூஜைப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் சிலவற்றை சாலையின் ஓரத்திலேயே வீசிச் சென்றுள்ளனர். கோவிலின் முன்பு பூசாரிப்பட்டி என்று எழுதப்பட்ட ஒரு சைக்கிள் இருந்தது. கொள்ளையர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. சைக்கிள் பஞ்சரானதால் அதனை எடுத்துச் செல்ல முடியாமல் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 கோவில்களில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெரியவரவே வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், சுரேந்திரன், ஏட்டு ராமர் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கோவில்கள் மற்றும் வீட்டில் ஒரே நாள் இரவில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்தலக்குண்டு நகரில் இது போன்று பல கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பிடிபடாமல் உள்ளனர். அந்த வழக்கைப் போல் இல்லாமல் தற்போது நடந்துள்ள கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News