செய்திகள்

பெரம்பலூரில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2017-04-24 17:25 GMT   |   Update On 2017-04-24 17:25 GMT
பெரம்பலூரில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று மதியமும் வெயில் கொளுத்தியது. ஆனால் நேற்று மாலை இதமான தட்பவெப்பநிலை நிலவியது. இதைத்தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதில் பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதி உள்ளிட்ட பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சிறு சிறு மணிகள் போன்று காட்சி அளித்த ஆலங்கட்டிகளை சிறுவர்- சிறுமிகள் ஆர்வமுடன் கைகளில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

பெரியவர்களும் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து வைத்து, அதனை புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்து, தங்களுடைய மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மாலை 6.20 மணி முதல் இரவு 7.15 மணி வரை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலை, புதிய பஸ் நிலையம், பாலக்கரை, துறைமங்கலம், ஆத்தூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. மேலும் வேப்பந்தட்டை, பாடாலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வறட்சியால் பல கிணறுகள் வறண்டு விட்டன.

இந்நிலையில் நேற்று பெய்ததுபோல் இன்னும் ஓரிரு நாட்கள் மழை தொடர்ந்தால், நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் வாடிவரும் பயிர்களுக்கும், தண்ணீரின்றி தவிக்கும் கால்நடைகளுக்கும் இந்த மழை பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Similar News