செய்திகள்

மது அருந்தி விட்டு பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியர் கைது

Published On 2017-04-13 05:39 GMT   |   Update On 2017-04-13 05:40 GMT
புதுவையில் மது குடித்து விட்டு பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை பனையாடி குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன். இவர், மது அருந்து விட்டு பணிக்கு வந்ததாகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் தலைமை ஆசிரியர் கல்வித்துறையில் புகார் அளித்ததன் பேரில் சுப்பிரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சுப்பிரமணியன் கடந்த மாதம் 24-ந்தேதி மீண்டும் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்தார். அவரை பள்ளியை விட்டு வெளியே போகும்படி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

அப்போது சுப்பிரமணியன் தலைமை ஆசிரியரையும், அங்கிருந்த சக ஆசிரியையும் இணைத்து ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் தலைமை ஆசிரியரை கையால் தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட மற்ற ஆசிரியர்களையும் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறையிடம் மீண்டும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கரிக்கலாம்பாக்கம் போலீசாருக்கு கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

அதன் பேரில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது, கையால் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.

Similar News