செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் விடிய விடிய பற்றி எரிந்த தீ

Published On 2017-04-11 11:53 GMT   |   Update On 2017-04-11 11:53 GMT
திண்டுக்கல் குப்பை கிடங்கில் விடிய விடிய பற்றி எரிந்த தீயால் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் புகையால் அவதிக்குள்ளாகினர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் நகர் பழனி சாலையில் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ள இக்குப்பை கிடங்கை நகருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தபலனும் இல்லை.

குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் நேற்று அதிகாலை 4 மணிவரை தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட புகை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் பரவியது. எனவே அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அனிதா கூறியதாவது,

அதிகமான வெயிலின் தாக்கம், குப்பைகளில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு ஆகியவை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் 1960-ம் ஆண்டு முதல் குப்பைகள் தேங்கியுள்ளன.

எனவே இவற்றை படிப்படியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டம் தயாரித்துள்ளது. இதேபோல் மீண்டும் தீவிபத்து ஏற்படாமல் இருக்க அவ்வப்போது குப்பைகள் மீது தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளின் மையத்தில் குப்பை கிடங்கு உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுவதை தவிர்க்க குப்பைகளை மாற்று இடத்துக்கு கொண்டு சென்று படிப்படியாக குறைக்கும் திட்டமும் உள்ளது என்றார்.

Similar News