செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

Published On 2017-04-03 07:09 GMT   |   Update On 2017-04-03 07:09 GMT
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் தலையை பாதி மொட்டையடித்து மீசை பாதியை வழித்தும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கோரிக்கையை மத்தியஅரசு நிறைவேற்ற கோரியும் ஹைட்ரோன் கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுவை சட்டக்கல்லூரியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியேறினர்.

பின்னர் அவர்கள் புதுவை கடற்கரை சாலைக்கு வந்தனர். அவர்கள் சீகல்ஸ் ஓட்டல் பின்புறம் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News