செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிரடி வேட்டை: கத்தியுடன் பதுங்கி இருந்த 2 ரவுடிகள் கைது

Published On 2017-03-20 09:33 GMT   |   Update On 2017-03-20 09:33 GMT
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி கத்தியுடன் பதுங்கி இருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ஜெயக்குமாருக்கு காசிமேடு பவர் குப்பத்தில் 2 ரவுடிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ், காசிமேடு துறைமுக இன்ஸ்பெக்டர் சரவணபிரபு ஆகியோர் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை காசிமேடு பவர் குப்பத்திற்கு சென்று அதிரடி வேட்டை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 ரவுடிகளை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் காசிமேட்டை சேர்ந்த வெற்றிவேல், தண்டையார் பேட்டையை சேர்ந்த செல்வம் 2 பேரும் ரவுடிகள். இவர்கள் மீது காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம், ராயபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி உள்ளது.

இதில் வெற்றிவேல் பிரபல ரவுடி பாக்சர் வடிவேல் என்பவரின் மகன். இவர்கள் 2 பேரும் அங்கு எதற்காக பதுங்கி இருந்தார்கள் என்பது தெரியவில்லை. 2 பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News