செய்திகள்

அமைச்சர் முன்னிலையில் காங்- என்.ஆர். காங்கிரசார் மோதல் திருபுவனையில் பரபரப்பு

Published On 2017-03-16 10:54 GMT   |   Update On 2017-03-16 10:54 GMT
அமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ்- என்.ஆர். காங்கிரசார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி:

அமைச்சர் கமலக்கண்ணன் இன்று காலை மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைய உள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

காட்டேரிகுப்பம் அரசு பள்ளியை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் கமலக்கண்ணனை வரவேற்க காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் வீரராகவன், மாவட்ட தலைவர் சீனுவாச மூர்த்தி, வட்டார தலைவர் டி.எஸ்.ஏ. கண்ணன், சிறு பான்மை பிரிவு தலைவர் சையது மற்றும் காங்கிரசார் திரண்டு வந்திருந்தனர்.

அங்கு பள்ளியை அமைச்சர் கமலக்கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தொகுதி எம்.எல்.ஏ.வான டி.பி.ஆர். செல்வம் பள்ளியில் உள்ள குறைகளை எடுத்து கூறினார்.

ஆனால் காங்கிரசார் கூறிய குறைகளை அமைச்சர் கமலக்கண்ணன் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கமலக்கண்ணன் தனது காரிலேயே டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ.வை அழைத்து கொண்டு லிங்கா ரெட்டி பாளையத்துக்கு சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் அமைச்சர் கமலக் கண்ணனின் செயல்பாடு குறித்து டெல்லியில் இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியை போனில் தொடர்பு கொண்டு புகார் செய்தனர்.

மேலும் திருபுவனைக்கு அரசு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து அமைச்சர் கமலக்கண்ணனை பற்றி புகார் மனுவும் அளித்தனர்.

இதற்கிடையே புகார் கொடுக்க வந்த காங்கிரசாரிடம் திருபுவனை தொகுதி என்.ஆர். காங்கிரசார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. பற்றி எங்கள் தொகுதிக்கு வந்து எப்படி புகார் தெரிவிக்கலாம்? சட்டசபையிலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ புகார் மனு கொடுக்க வேண்டியதுதானே என்று காங்கிரசாரிடம் தகராறு செய்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளும் உருவானது.இதையடுத்து அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ்- என்.ஆர். காங்கிரசார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News