செய்திகள்

கருங்கல் அருகே தோ‌ஷம் கழிப்பதாக 10 பவுன் நகை திருடிய போலி சாமியார்கள்

Published On 2017-03-14 10:50 GMT   |   Update On 2017-03-14 10:50 GMT
கருங்கல் அருகே தோ‌ஷம் கழிப்பதாக கூறி 10 பவுன் நகையை திருடிய போலி சாமியார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:

கருங்கல் அருகே உள்ள பாலூர் கோட்டவிளையை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 43) தொழிலாளி. இவரும் இவரது மனைவியும் வீட்டில் இருந்த போது, அவர்கள் வீட்டிற்கு 2 பேர் வந்தனர்.

அவர்கள் இருவரும் காவி உடை அணிந்து விபூதி பூசி பார்ப்பதற்கு சாமியார் போல் தோற்றம் அளித்தனர். அவர்கள் வின்சென்டை பார்த்து உங்கள் வீட்டில் தோ‌ஷம் உள்ளது. அதற்கு சிறப்பு பூஜை செய்தால் அந்த தோ‌ஷம் நீங்கும். இல்லாவிட்டால் தோ‌ஷம் காரணமாக உங்கள் குடும்பத்தில் மிகுந்த கஷ்டம் ஏற்பட்டு விடும் என அவர்கள் கூறினர்.

இதை நம்பிய வின்சென்ட் அந்த சாமியார்களை தனது வீட்டிற்குள் அனுமதித்தார். அவர்களும் வீட்டினுள் சென்று தங்களிடம் இருந்த பூஜை பொருட்களை எடுத்து வைத்து பூஜையை தொடங்கினார்கள்.

பூஜை நடந்து கொண்டிருந்த போது, வின்சென்டும் அவரது மனைவியும் பயபக்தியுடன் அருகில் நின்று கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சாமியார்கள் தோ‌ஷம் கழிக்கும் பூஜையில் தங்கம் வைத்தால்தான் தோ‌ஷம் விலகும் என்று கூறினார்கள்.

இதனால் வின்சென்ட் தன்னிடம் இருந்த 10 பவுன் தங்க நகையை எடுத்து பூஜையில் வைக்க சாமியார்களிடம் கொடுத்தார். அவர்களும் அந்த தங்க நகையை வைத்து பூஜையை தொடர்ந்தனர்.

சிறிது நேரம் பூஜை நடத்தி விட்டு சாமியார்கள் இருவரும் அதற்குரிய பணத்தையும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். சாமியார்கள் சென்ற பிறகு வின்சென்டும் அவரது மனைவியும் பூஜையில் வைக்கப்பட்டு இருந்த நகையை பார்த்த போது, அது மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

அப்போதுதான் சாமியார் போல் வந்த இருவரும் பூஜை செய்வது போல் நடித்து தங்களை ஏமாற்றி நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இந்த நூதன மோசடி பற்றி அவர்கள் கருங்கல் போலீசில் புகார் செய்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து போலி சாமியார்கள் இருவரையும் தேடி வருகிறார்கள்.

Similar News