செய்திகள்

விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க 4 மாதம் கால அவகாசம்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு

Published On 2017-03-07 08:58 GMT   |   Update On 2017-03-07 08:58 GMT
போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு டி.ராஜாபாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி திருச்செங்கோட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

உயர் போலீஸ் அதிகாரிகளின் துன்புறுத்தலால் அவர் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து விஷ்ணுபிரியாவின் மர்ம மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அவரது தந்தை ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதில், ‘சி.பி.ஐ. வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் செய்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, விஷ்ணுபிரியா மர்ம மரணம் குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 14-ந்தேதி சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு டி.ராஜாபாலாஜி ஒரு மனு தாக்கல் செய்தார்.



விஷ்ணுபிரியா மர்ம மரணம் குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 14-ந்தேதி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

பின்னர், சம்பவம் நடந்த இடத்துக்கு நேரடியாக சென்று, தடயவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. விஷ்ணுபிரியாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை சேகரித்து, 50-க்கும் மேற்பட்ட காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள், ஊழியர்களை விசாரித்து விட்டோம்.

விஷ்ணுபிரியாவின் பெற்றோர், உறவினர்களிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான உளவுப்பிரிவு அறிக்கையும் பெறப்பட்டுள்ளது. தற்போது, புலன் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால், இந்த ஐகோர்ட்டு நிர்ணயித்த 3 மாதங்களுக்குள் புலன்விசாரணையை நடத்தி முடிக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, இந்த விசாரணையை முடிக்க மேலும் 4 மாத கால அவகாசம் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Similar News