செய்திகள்

பழனி-கொடைக்கானல் சாலையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

Published On 2017-03-05 03:47 GMT   |   Update On 2017-03-05 03:47 GMT
பழனி- கொடைக்கானல் மலைச்சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. அப்பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:

பழனி அருகே உள்ள கொடைக்கானல் மலை அடிவாரம் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அவற்றின் கால்தடத்தை கொண்டு கண்டறியப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் சிறுத்தைகள் தண்ணீரை தேடி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்து செல்கின்றன. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் உள்ள தேக்கந்தோட்டம், எல்லைக் கருப்பணசாமி கோவில் பகுதிகளில் சிறுத்தைகள நடமாட்டம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து பழனி வனச்சரகர் கணேஷ்ராம் கூறியதாவது:-

வறட்சியால் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க தொட்டிகள் கட்டி அதில் தண்ணீர் நிரப்பி வருகிறோம். பழனி அருகே உள்ள கொடைக்கானல் மலை அடிவாரம் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது உண்மைதான்.

அவற்றுக்கு தேவையான இரையான மான் உள்ளிட்டவை வனப் பகுதியில் உள்ளது. தண்ணீர் தொட்டிகளில் நீரும் அவ்வப்போது நிரப்புவதால் சிறுத்தை வனத்தை விட்டு வெளியே வர வாய்ப்பு இல்லை. இருந்த போதும் வனப்பகுதி அருகே வசிக்கும் மக்கள், தற்போது சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News