செய்திகள்

போலீஸ் அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றும் போலீசார்

Published On 2017-02-28 05:32 GMT   |   Update On 2017-02-28 05:32 GMT
போலீஸ் அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா படத்திற்கு பதிலாக தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை மாட்டி வருகிறார்கள்.
சென்னை:

அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் படங்களை மாட்டி வைத்திருப்பது வழக்கம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுபற்றி அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் படங்களை அகற்றுவதா? வேண்டாமா? என்று பல அலுவலகங்களில் தயக்கத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் போலீஸ் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படங்களை அகற்றி வருகிறார்கள்.

தேவையில்லாத சர்ச்சையில் காவல்துறை சிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதியாக இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.



சுவரில் மாட்டப்பட்டிருந்தது மட்டுமில்லாமல் மற்றொரு போட்டோவை சில அதிகாரிகள் மேஜை மீதும் வைத்திருந்தார்கள். இப்போது எல்லாவற்றையும் அகற்றி வருகிறார்கள்.

அதற்கு பதிலாக தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை மாட்டி வருகிறார்கள்.

போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்த படங்களும் அகற்றப்பட்டு விட்டன. படங்களை அகற்றும்படி உத்தரவு எதுவும் வரவில்லை. நாங்களாகவே அகற்றினோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News