செய்திகள்

வழிநெடுக பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்த கூடாது: முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

Published On 2017-02-23 06:30 GMT   |   Update On 2017-02-23 06:30 GMT
தனது பாதுகாப்புக்காக வழிநெடுக போலீசாரை சாலையில் நிறுத்த கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்துக்கு முதல்-அமைச்சர் வருகிறார் என்றால் அவரது வீட்டில் இருந்து தலைமை செயலகம் செல்லும் பாதை வரை வழிநெடுக போலீசாரை கால்கடுக்க நிற்க வைப்பது வழக்கம்.

முதல்- அமைச்சர் வீட்டில் இருந்து கிளம்பினாலே போலீசார் ‘வயர்லெசில்’ சி.எம். புறப்பட்டு விட்டார் என்று கூறுவதும் எஸ்கார்ட் வாகனம் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டே செல்வதும் வழக்கமாக இருந்தது.

ஆனால் இது போல் எதையும் தனக்காக செய்ய வேண்டாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

வீட்டில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு வந்த போது வழி நெடுக ரோட்டின் இருபுறமும் பாதுகாப்புக்காக போலீசாரை நிற்பதை பார்த்தார். பல இடங்களில் பெண் போலீசாரும் வெயிலில் கால்கடுக்க நிற்பதை கண்டார்.

உடனே போலீஸ் உயர் அதிகாரிகளை அழைத்து எனது பாதுகாப்புக்கு பெண் போலீசாரை எதற்கு ரோட்டில் நிற்க வைக்கிறீர்கள். இது தேவையில்லாதது. அவர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள். இனிமேல் இப்படி யாரையும் நிற்க வைக்க வேண்டாம். போக்குவரத்து நெரிசலான சாலை சந்திப்பு பகுதியில் மட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருந்தால் போதும். மற்ற இடங்களில் போலீசாரை போலீஸ் நிலைய பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என்று கூறி உள்ளார்.



இதே போல் அவர் கோட்டையில் இருந்து வீட்டுக்கு புறப்படும் போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சி.எம். புறப்படுகிறார் என்று வயர்லெசில் கூறினார்.

இதைப் பார்த்த எடப்பாடி பழனிச்சாமி எதற்கு இப்படி செய்கிறீர்கள். இது தேவையில்லை. நான் எப்போதும் போல் இருக்க விரும்புகிறேன். வழக்கமாக வந்து செல்வது போல் செல்கிறேன் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளார்.

மதிய சாப்பாட்டுக்கு அவர் வீட்டுக்கு செல்வது கிடையாது. கோட்டையிலேயே சாப்பிடுகிறார். வீட்டில் இருந்து கோட்டைக்கு சாப்பாட்டை வரவழைத்து அங்குள்ளவர்களுடன் பகிர்ந்து சாப்பிடுகிறார்.

தனக்கு அனுப்பப்படும் கோப்புகள் மீது அன்றைய தினமே அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுத்து கையெழுத்திடுகிறார். எந்த கோப்புகளும் தனது கையெழுத்துக்காக 1 நாளைக்கு மேல் தேங்க கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Similar News