செய்திகள்

தெங்கம்புதூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் கார் திருட்டு

Published On 2017-02-21 16:44 GMT   |   Update On 2017-02-21 16:44 GMT
தெங்கம்புதூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் காரை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்:

குமரி மாவட்டம் தெங்கம்புதூரை அடுத்த குளத்துவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 70), ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இதனால் வீட்டில் ஜெயராஜூம், அவரது மனைவியும் மட்டும் வசித்து வந்தனர். மகன் சென்னையில் குடும்பத்துடன் உள்ளார். மகள் மணவாளக்குறிச்சியில் வசிக்கிறார்.

ஜெயராஜ் கடந்த 14-ந் தேதி மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். இதனால் அவரது கார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தது.

நேற்று காலை ஜெயராஜின் வீட்டு காம்பவுண்டு கேட் திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த காரை காணவில்லை. மேலும் வீட்டின் முன்பக்க கதவும் திறந்து கிடந்தது.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் சென்னையில் உள்ள ஜெயராஜிக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் இச்சம்பவம் பற்றி சுசீந்திரம் போலீசாருக்கு சென்னையில் இருந்தபடியே புகார் செய்தார்.

மேலும் மாணவாளக்குறிச்சியில் உள்ள மகளுக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து அவரது மகள் தெங்கம்புதூர் வீட்டுக்கு விரைந்து சென்றார்.

அங்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும், வீட்டில் இருந்த பீரோக்கள், அலமாரி போன்றவை திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன.

யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், மேஜையில் இருந்த பீரோ சாவிகளை எடுத்து வீட்டில் இருந்த பீரோக்களை திறந்து நகை, பணம் ஏதாவது இருக்கிறதா? என தேடினர். ஆனால், கொள்ளையர்கள் கையில் எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையே ஒரு பீரோவின் சாவி கிடைக்காததால் அதை திறக்க முடியவில்லை. இதனால், அந்த பீரோவில் இருந்த 2¼ பவுன் நகை தப்பியது.

தொடர்ந்து, மர்ம நபர்கள் புறப்பட்டு செல்லும் போது, வீட்டின் வெளியே நின்ற காரை திருடி சென்றுள்ளனர்.

இந்த திருட்டுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Similar News