செய்திகள்

தமிழக மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

Published On 2017-02-19 00:01 GMT   |   Update On 2017-02-19 00:01 GMT
சட்டசபையில் சர்வாதிகார முறையில் வாக் கெடுப்பு நடந்தது என்றும் தமிழக மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

சட்டசபையில் சர்வாதிகார முறையில் வாக் கெடுப்பு நடந்தது என்றும் தமிழக மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டசபையில் நடந்த ரகளை மற்றும் அதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை கண்டித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் சென்னை மெரினா காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் போராட்டத்தில் கைதாகி திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு இது ஒரு மோசமான ஒரு கருப்பு நாளாக அமைந்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் பெற்றிருக்கக்கூடிய சசிகலா நடராஜன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பினாமி ஆட்சியாக, ஒரு முகமூடி ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய வகையில் இன்று சட்டசபையில் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

மறைமுக வாக்கு என்ற அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால், அதன்படி செய்ய சபாநாயகர் முன் வரவில்லை. காவல்துறையை யும், அடியாட்களையும் வரவழைத்து, சட்டசபையில் இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க் களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி, மூட்டைகளை தூக்குவது போல எங்களை எல்லாம் குண்டு கட்டாக தூக்கி வந்து, அவைக்கு வெளியில் வீசினார்கள். நானும் தாக்கப்பட்டு, எனது சட்டை கிழிந்துள்ளது. அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை சர்வாதிகார முறையில் நடத்தியுள்ளனர்.

குற்றவாளியான சசிகலாவின் பினாமியாக உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி வரவே கூடாதென்று மக்கள் உறுதியோடு இருந்தார்கள். ஆனால் அவர்கள் இன்றைக்கு மிகுந்த அதிர்ச்சிக்கும், பெரும் அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். எனவே, இந்த ஆட் சியை தூக்கி எறிய வேண்டும் என்ற பொதுமக்களுடன், தி.மு.க.வும் மட்டுமல்ல, பல்வேறு கட்சிகளையும், இந்த ஆட்சியின் மீது அருவருப்பிலும், கோபத்திலும் உள்ள ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஒன்று திரட்டி, அமைதி வழியிலான விரைவில் மிகப் பெரிய தொடர் போராட்டத்தில் ஈடுபட நாங்கள் முடி வெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தற்போது மெரினாவில் பெருமளவு பொதுமக்கள் திரண்டு இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- ஓ.பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி அல்லது எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று தான் பொதுமக்கள் கருதுகிறார்கள். அதனால் தான், நாங்கள் இந்த அறவழி போராட்டம் நடத்துவதென திடீரென முடிவெடுத்து, காந்தி சிலை எதிரில் உட்கார்ந்ததும், ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் எல்லாம் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து திரண்டனர்.

கேள்வி:- கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- கவர்னர் அமைதியாக இருந்தால், நாங்களும் அமைதி வழியிலான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார். 

Similar News