செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2017-02-08 11:50 GMT   |   Update On 2017-02-08 11:50 GMT
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் கணேசன் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் கார் கம்பெனி ஊழியர் ஆவார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கணேசன், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அது குறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை நீதிபதி மதுசூதனன் விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கணேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் கணேசனிடம் இருந்து அபராத தொகையானது கோர்ட்டு மூலம் வசூலிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் அரசு வக்கீல் லட்சுமிபிரியா ஆஜரானார்.

Similar News