செய்திகள்

வில்லியனூரில் சமூக சேவகர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

Published On 2017-01-27 12:30 GMT   |   Update On 2017-01-27 12:30 GMT
வில்லியனூரில் சமூக சேவகர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் ராஜா முகமது. (வயது 40). இவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 16 வயதில் மகள் உள்ளனர்.

இதற்கிடையே ராஜா முகமது தனது தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த ராஜா முகமது நேற்று மாலை அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரது தாயிடம் தனக்கு உனது மகளை திருமணம் செய்து கொடுக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதனை அந்த பெண்ணின் தாயார் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ராஜா முகமது கையில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில், ராஜா முகமது உடல் முழுவதும் எரிந்து கருகினார். அவரை காப்பாற்ற முயன்ற பெண்ணின் தாயாருக்கும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News