செய்திகள்

புதுவை சட்டசபை நாளை கூடுகிறது

Published On 2017-01-23 07:42 GMT   |   Update On 2017-01-23 07:42 GMT
புதுச்சேரியில் இந்தாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் நாளை கூடுகிறது. அப்போது ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை பாராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி தீர்மானம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முடிவடைந்தது.

இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு கூடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக ஆண்டின் முதல் கூட்டத்தில் சட்டசபையில் கவர்னர் உரையாற்றுவார். இதற்காக விருப்பம் தெரிவித்து கவர்னர் கிரண்பேடி அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால், அரசு சார்பில் இதுவரை கவர்னரை உரை தயாரிக்கப்படவில்லை. மேலும், கவர்னர் உரைக்கு அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்படவில்லை. இதனால் நாளைய கூட்டத்தில் கவர்னர் உரை இடம் பெறாது.

நாளைய கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, புதுவை முன்னாள் துணை சபாநாயகர் ஏ.வி. ஸ்ரீதரன், முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து சில நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்படுகிறது.

இதனையடுத்து மீண்டும் சட்டசபை கூடுகிறது. அப்போது கூட்டத்தில் புதுவை மற்றும் காரைக்காலை வறட்சி மாவட்டமாக அறிவித்து மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்பது தொடர்பான விவாதம் நடைபெறுகிறது.

மீண்டும் மறுநாள் (புதன் கிழமை) சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை பாராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

இத்துடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது. தொடர்ந்து சட்டமன்றம் காலவரையற்று ஒத்தி வைக்கப்படுகிறது.

Similar News