செய்திகள்

5-வது நாளாக அதே எழுச்சி: அலை, அலையாய் திரண்டு புதுவை மக்கள் போராட்டம்

Published On 2017-01-21 09:37 GMT   |   Update On 2017-01-21 09:37 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. அதே போன்று புதுவையிலும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை ரோடியர் மில் மைதானத்தில் திரண்டு அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். இன்று 5-வது நாளாக அதே எழுச்சியுடன் போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுவையில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பள்ளி- கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பள்ளி- கல்லூரி மாணவர்கள் எல்லாம் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். எனவே, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்ட களத்தில் திரண்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்ததால் போராட்ட மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. எனவே, நேற்று போல் இன்று அதிக கூட்டம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த எதிர் பார்ப்பை பொய்யாக்கும் வகையில் நேற்றை விட அதிகமான பேர் இன்று ரோடியர் மில் போராட்ட களத்தில் திரண்டனர். தண்ணீர் தேங்கிய இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் ஈ மொய்ப்பது போல் போராட்டக்காரர்களின் கூட்டம் மொய்த்தது.

இந்த மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு கண்காட்சி ஒன்று நடந்தது. அதற்காக அமைக்கப்பட்டு இருந்த பந்தல் ஒன்று பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தன. அந்த இடத்தில் குவிந்து தங்கள் போராட்டத்தை தொடங்கினார்கள்.

வழக்கம் போலவே இன்றைய போராட்டத்திலும் கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பொதுவாக மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற உயர்கல்வி படிக்கும் மாணவிகள் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருப்பார்கள்.

ஆனால், இந்த போராட்டத்தில் அவர்கள்தான் அதிக அளவில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான மாணவர்கள்-இளைஞர்கள் கருப்பு உடை அணிந்திருந்தனர். அதே போல் மாணவிகளும் பலர் கருப்பு உடை அணிந்திருந்தார்கள்.

நேற்றைய போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து பங்கேற்றனர். அதேபோல் இன்றும் பல்வேறு அமைப்பினர் தங்கள் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தார்கள்.

நேற்று போலவே இன்றும் போராட்டக்காரர்களுக்கு சிற்றுண்டிகள், பல்வேறு வகை உணவுகள் குவிந்தன. பொதுமக்களும், பெரும் வசதி படைத்தவர்களும் தாராளமாக செலவு செய்து இந்த உணவு பொருட்களை போராட்டக்காரர்களுக்கு வாங்கி கொடுத்தனர்.

போராட்ட மைதானத்தில் 2 வயது குழந்தைகள் வரை 80 வயது முதியவர்கள் வரை எல்லா தரப்பினரும் குவிந்து இருந்தார்கள். புதுவையில் இப்படியொரு போராட்டக்களம் அமைந்ததே இல்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய எழுச்சியாக இருந்தது.

போராட்டத்தில் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் இல்லாத அளவுக்கு மாணவர்களே தங்களுக்குள் கட்டுப்பாடுகளை உருவாக்கி சிறப்பாக நடத்தினார்கள்.

போராட்டத்துக்கு வரும் ஒருவர் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதில் முழு கவனமாக இருந்தார்கள். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பலரை பேசுவதற்கு அனுமதித்தனர். அவர்கள் ஆவேசமாக குரல் எழுப்பி பேசியது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

Similar News