செய்திகள்

புதுவை பஸ் நிலையம் முன்பு மோடி உருவ பொம்மை எரிப்பு

Published On 2017-01-20 10:08 GMT   |   Update On 2017-01-20 10:08 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரோடியர் மில் திடலில் மாணவர்கள் போராட்டம் இன்று 4-வது நாளாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்தனர்.

புதுச்சேரி:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரோடியர் மில் திடலில் மாணவர்கள் போராட்டம் இன்று 4-வது நாளாக நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்க புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்தனர்.

இந்த நிலையில் ரோடியர் மில் திடலுக்கு மாணவர்களில் சிலர் புதிய பஸ் நிலையம் வழியாக வந்தனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த மோடி உருவ பொம்மையை பஸ் நிலைய வாசலில் வைத்து திடீரென தீ வைத்து எரித்தனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து உருவ பொம்மையை கைப்பற்றினார்கள்.

இதே போல் போராட்டம் நடத்திய மாணவர்கள் பலர் மோட்டார் சைக்கிளில் புதுவை நகரம் முழுவதும் ஊர்வலமாக கோ‌ஷமிட்டபடி சென்றனர்.

அதில் ஒரு பிரிவினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது கவர்னர் மாளிகையை சுற்றி பேரிகார்டு வைக்கப்பட்டு இருந்ததால் மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து அந்த மாணவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Similar News