செய்திகள்

மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்

Published On 2017-01-18 16:41 GMT   |   Update On 2017-01-18 16:41 GMT
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்புக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்து இருந்தார்.

சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமரை சந்திப்பதற்காக முதலமைச்சர் டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் போராட்டக் குழுவினர் பேசியதாவது:-

முதல்வர் பன்னீர் செல்வத்துடன் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தனது இல்லத்தில் உள்ள 4 காளைகளை பார்க்குமாறு எங்களை வற்புறுத்தி கூறினார்.

நாங்கள் அந்த காளை மாடுகளை பார்த்தோம். அந்த காளைகளை பார்க்கையில் மிகவும் வியப்பாக இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்புக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மேலும் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News