செய்திகள்

மெரினாவில் கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூட்டம்: போலீசார் குவிப்பு- லேசான தடியடி

Published On 2017-01-18 15:07 GMT   |   Update On 2017-01-18 15:07 GMT
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூடியுள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். லேசான தடியடி நடத்தப்பட்டதால் சிறிது பதற்றம் நிலவியது.
சென்னை:

ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூட்டம் கூடியுள்ளதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை நிலவரப்படி சுமார் 50 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இதுவரை ஒன்று கூடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள், பெண்கள் என பல தரப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இரவு 8 மணியளவில் லேசான தடியடி நடத்தப்பட்டதால் சிறிது பதற்றம் நிலவியது. வேடிக்கை பார்த்தவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது இந்த தடியடி நடத்தப்பட்டதாக தெரிகிறது.

எனினும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டத்தை தொடரலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News