செய்திகள்

மோடி உருவப்படத்தை எரித்த தமிழ் அமைப்பினர் 100 பேர் கைது

Published On 2017-01-17 12:16 GMT   |   Update On 2017-01-17 12:16 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்காத பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்த தமிழ் அமைப்பினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. புதுவையிலும் கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்காத பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும் காமராஜர் சிலை சதுக்கத்தில் புதுவையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கழகம் முருகானந்தம், தமிழ் தேசிய பேரவை வேலுச்சாமி, தமிழர் களம் பிரகாஷ், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென மறைத்து வைத்திருந்த பிரதமர் மோடி, தமிழக முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கவர்னர் கிரண்பேடி உருவ படங்களை தீயிட்டு கொளுத்தினர். போலீசார் அவர்களை தடுக்க முயன்றதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சட்டக்கல்லூரி மாணவரும், தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளருமான ரெமிஎட்வின் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தியும், கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Similar News