செய்திகள்

ஏழை பிள்ளைகளின் பசியை போக்கியவர்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ். சுவாமிநாதன் புகழாரம்

Published On 2017-01-17 10:22 GMT   |   Update On 2017-01-17 10:22 GMT
ஏழை பிள்ளைகளின் பசியை போக்கியவர் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை:

மறைந்த தமிழக முதல்வர் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில் எம்.ஜி.ஆருடனான தனது நினைவலைகளை பிரபல வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.

பள்ளிகளில் மாணவருக்கு இணையாக மாணவியரின் எண்ணிக்கையும் அமைய வேண்டும் என விரும்பிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கல்வியில் மாணவர்கள் கவனம் செலுத்துவதற்கு இடையூறாக இருந்த பசிப்பிணியைப் போக்கிய சம்பவத்தை தனது அறிக்கையில் எம்.எஸ். சாமிநாதன் பதிவு செய்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக அனைவரும் கல்வியறிவை பெற எம்.ஜி.ஆர். வழிகாட்டியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், சத்துணவு ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அதிக அக்கறை செலுத்தி வந்தார். 1980-84 ஆண்டுகளுக்கிடையில் அவர் இரண்டாவது முறை முதலமைச்சராக பதவி வகித்தபோது, நான் மத்திய திட்ட கமிஷனில் இடம்பெற்றிருந்தேன்.

முதலில் மத்திய திட்ட கமிஷனின் துணைத்தலைவராகவும், பின்னர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்களுடன் சேர்ந்து உறுப்பினராகவும் இருந்தேன்.

அந்த காலகட்டத்தில் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசிய எம்.ஜி.ஆர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிறைவேற்றப்படும் ஒருங்கிணைந்த சத்துணவு திட்டத்துக்கு மத்திய திட்ட கமிஷனின் நிதியை பெற்றுத்தர உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்படி, இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக திட்ட கமிஷனின் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்தேன்.



சிறுவயதில் பலமுறை பள்ளிக்கு பட்டினியாக சென்ற தனது இளமைக்கால அனுபவத்தை என்னிடம் குறிப்பிட்ட எம்.ஜி.ஆர்., அப்படி பட்டினியாக பள்ளிக்கு சென்ற நாட்களில் ஆசிரியர் என்ன பாடம் நடத்துகிறார்? என்பதை புரிந்துகொள்ள முடியாதபடி பசி தன்னை வாட்டியதாகவும், அந்த அனுபவம் தமிழ்நாட்டில் வேறெந்த குழந்தைக்கும் ஏற்பட கூடாது என்றுதான் விரும்பவதாகவும் அப்போது தெரிவித்திருந்தார்’ என எம்.எஸ். சுவாமிநாதன் தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Similar News