செய்திகள்

டிரக்யாஸ்டமி சிகிச்சையால் கருணாநிதி குணம் அடைவார்: எச்.வி.ஹண்டே

Published On 2016-12-17 05:55 GMT   |   Update On 2016-12-17 05:55 GMT
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி டிரக்யாஸ்டமி சிகிச்சையால் குணம் அடைவார் என்று எச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. பிரமுகருமான எச்.வி.ஹண்டே காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அவர் கருணாநிதி உறவினர்களிடம் பேசினார். பிறகு அவர் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கருணாநிதியின் உடல் நலம் பற்றி டாக்டர்களிடம் விசாரித்தேன். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கருணாநிதியின் தொண்டையில் டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தி உள்ளதாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த சிகிச்சை மூலம் நிறைய பேர் குணம் அடைந்துள்ளனர்.

அது போல கருணாநிதியும் குணம் அடைய வாய்ப்பு உள்ளது. விரைவில் அவர் வீடு திரும்புவார்.

நான் மேல்சபை உறுப்பினராக இருந்த போது பேராசிரியர் அன்பழகனும் நானும் அருகருகே இருப்போம். அப்போது அண்ணாவையும் கலைஞரையும் பார்த்து பழக வாய்ப்பு கிடைத்தது.

1967-ல் தி.மு.க. சுதந்திரா கட்சி கூட்டணியில் பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டேன். எனக்கு ஆதரவாக கருணாநிதி பிரசாரம் செய்தார்.

நான் எதிர்க்கட்சியில் இருக்கும் போது கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தார். நான் அமைச்சராக இருந்த போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் அனுமதி கேட்டதும், உடனே வாய்ப்பு கொடுத்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் அவர் நன்றாக பழகினார்.

எதிர்க்கட்சியினரின் திறமைகளை பாராட்டக் கூடியவர். அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் எச்.வி.ஹண்டே கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ரெங்கராஜன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதி உடல் நலம் விசாரித்தனர்.

Similar News