செய்திகள்

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்

Published On 2016-12-09 08:22 GMT   |   Update On 2016-12-09 08:22 GMT
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகள் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொல்.திருமாளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக மாநில அரசுகள் தொடுத்த மேல் முறையீடுகளை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது என்றும் தமிழ்நாட்டிற்கு 2000 கனஅடி தண்ணீர் தர வேண்டும் என்ற இடைக்கால தீர்ப்பு டிசம்பர் 15-ந்தேதி வரை தொடர வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள இன்றைய தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறோம்.

இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கே திண்டாடும் நிலை உள்ளது. எனவே கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சட்டபேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகள் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடுத்த 2 மாதங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு திருமாளவன் அதில் கூறியுள்ளார்.

Similar News