செய்திகள்

ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தள்ளிவைப்பு

Published On 2016-12-05 16:38 GMT   |   Update On 2016-12-05 16:38 GMT
முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர். இதே போல வெளியூரில் இருந்த எம்.எல்.ஏ.க்களும் இன்று காலையில் சென்னை வந்து சேர்ந்தனர்.

அதன்பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த அவசர கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலமைச்சரின் உடல்நலம் குறித்தும், தற்போதைய சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் முதல்வரின் உடல்நலம் குறித்து ஒத்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து பெறப்பட்டதாகவும், சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம், தேர்ந்து எடுக்கபட்டதாகவும் தகவல் வெளியானது.

அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மாலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இன்று இரவு 10 மணிக்கு மேல் அல்லது நாளை நடைபெறலாம் என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News