செய்திகள்

அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க கச்சத்தீவு செல்வோம்: ராமேசுவரம் மீனவர்கள்

Published On 2016-12-03 06:22 GMT   |   Update On 2016-12-03 09:20 GMT
அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தடையை மீறி கச்சத்தீவுக்கு செல்வோம் என்று ராமேசுவரம் மீனவர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:

தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் பிரச்சினைக்குரிய இடமாக கச்சத் தீவு இருந்து வருகிறது. இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள், மீனவர்கள் பங்கேற்பது வழக்கம்.

கச்சத்தீவில் தற்போது புதிதாக புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலய புனிதப்படுத்தும் விழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட 100 பேர் பங்கேற்ற அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு அனுமதி கோரப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகனராவ், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார். இந்த நிலையில் டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரப், கச்சத்தீவில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்றும், இலங்கை பக்தர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

கச்சத்தீவு செல்வதற்கு தமிழக மீனவர்களுக்கு எப்போதுமே உரிமை உண்டு. இந்த நிலையில் கடந்த 1983-ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுபோர் காரணமாக கச்சத்தீவு செல்வதில் தமிழக மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராமேசுவரம் துறைமுகத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தை அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக மீண்டும் கச்சத்தீவுக்கு சென்று அந்தோணியார் ஆலய விழாக்களில் கலந்து கொள்கிறோம். ஆனால் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலய திறப்பு விழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

சிறுபான்மை சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் இந்த நடவடிக்கையை முறியடிப்போம். வருகிற 7-ந்தேதி நடைபெறும் ஆலய திறப்பு விழாவில் ராமேசுவரம் மீனவர்கள் தடையை மீறி கச்சத்தீவுக்கு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News