செய்திகள்

67–ம் நாளாக சிகிச்சை: முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்க பயிற்சி

Published On 2016-11-28 00:24 GMT   |   Update On 2016-11-28 01:30 GMT
அப்பல்லோ மருத்துவமனையில் 67–ம் நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்க நேற்று பயிற்சி அளிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை:

தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22–ந் தேதி உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நேற்று 67–ம் நாளாக சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் உடற்பயிற்சி அளித்தார். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வெவ்வேறு வகையில் பிசியோதெரபி உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 7.20 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மேரி சியாங், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் இரவு புறப்பட்டு சென்றார்.

அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி கடந்த 25–ந்தேதி நிருபர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், ‘முதல்–அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்றும், அடுத்து அவர் எழுந்து நின்று நடக்க வேண்டும் என்றும், அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்புவார் என்றும்’ தெரிவித்தார்.

அதன்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று எழுந்து நிற்க பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து அவருக்கு இதேபோல் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு சிறப்பு பூஜை தினமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அ.தி.மு.க. மகளிரணி சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், அ.தி.மு.க. தொண்டர்கள் அன்னதானமும் வழங்கினார்கள்.

அப்பல்லோ மருத்துவமனை நுழைவுவாயில் அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே நேற்று இரவு அ.தி.மு.க. தொண்டர்கள் 9 பூசணிக்காய், 9 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

Similar News