செய்திகள்

பண தட்டுப்பாட்டை நீக்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Published On 2016-11-25 11:14 GMT   |   Update On 2016-11-25 11:15 GMT
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக் கப்பட்டதை யடுத்து ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாட்டை போக்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

மதுரை:

மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சியின் 5 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை வந்தார்.

முன்னதாக அவர் மதுரை காமராஜர் சாலையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றார். அங்கு வரிசையில் காத்திருந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் வங்கிகளில் காத்திருக்கும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன். வங்கிகளில் அதிக அளவில் முதியோர்கள் ஓய்வூதியம் வாங்க வந்துள்ளனர். 60 வயது மேல் உள்ள முதியோர்களுக்கும், தாய்மார்களுக்கும் தனி கவுண்டர் அமைக்குமாறு வங்கி மேலாளரிடம் கூறினேன்.

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மக்களின் பிரச்சினையை குறைக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி பண தட்டுப்பாட்டை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலஅவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து வருகிற 28-ந்தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்திலும் மத்திய அரசு அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் கட்சியினரும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனே சட்ட திருத்தத்தை கொண்டு வந்து உச்ச நீதிமன்ற அனுமதியுடன் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். இதனை தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News