செய்திகள்

நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டம்: பி.ஆர். பாண்டியன் பேட்டி

Published On 2016-10-28 04:22 GMT   |   Update On 2016-10-28 04:22 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி:

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழுவை அமைக்காமல் மத்திய அரசு, கர்நாடகத்துக்கு ஆதரவாக அரசியல் லாப நோக்கோடு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது.

இதை கண்டிப்பதோடு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி அணை உரிமைகளை மீட்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் வலியுறுத்தியும், மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையை தமிழக மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக வருகிற நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் தமிழகத்தை போராட்ட தினங்களாக அறிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இதற்காக பிரசார பயணம் நவம்பர் 5-ந் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி நவம்பர் 11-ந் தேதி சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னரிடம் மனு கொடுத்து நிறைவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News