செய்திகள்

ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் மீண்டும் சிகிச்சை

Published On 2016-10-24 07:11 GMT   |   Update On 2016-10-24 09:13 GMT
லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஏற்கனவே 2 முறை சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். நேற்று மீண்டும் அவர் சென்னை வந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தகவல்களை கேட்டு பெற்று அதற்கேற்ப சிகிச்சை அளித்தார்.
சென்னை:

முதல் - அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி முதல் உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 33 நாட்களாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நுரையீரலில் தேங்கி இருந்த நீரை வெளியேற்றுவதற்கு அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் - சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் நுரையீரலில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 நாட்கள் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமும் அவரது உடல்நிலை தேறி வருகிறது.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே ஏற்கனவே 2 முறை சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். நேற்று மீண்டும் அவர் சென்னை வந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தகவல்களை கேட்டு பெற்று அதற்கேற்ப சிகிச்சை அளித்தார்.

அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுக்கு டாக்டர் ரிச்சர்ட் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார்.

தமிழக கவர்னர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் 2 முறை ஆஸ்பத்திரிக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.

வெளிமாநிலங்களில் இருந்தும் அரசியல் பிர முகர்கள் பலர் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலைப் பற்றி டாக்டர்களிடமும், அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

ஜெயலலிதா குணம் அடையவும் கட்சி பாகுபாடின்றி அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு திரண்டு ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டி கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Similar News