செய்திகள்

கவர்னரால் எம்.எல்.ஏ.க்கள் உரிமை பறிக்கப்படுகிறது: அ.தி.மு.க. குற்றச்சாட்டு

Published On 2016-10-21 17:25 GMT   |   Update On 2016-10-21 17:24 GMT
புதுவையில் அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் இடையேயான பனிப்போரில் எம்.எல்.ஏ.க்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் தொடர்பான தேதி அறிவித்த பிறகு புதுவை மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஆளுங்கட்சியால் தேர்தல் நன்னடத்தை விதிகள் முழுமையாக மீறப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய தேர்தல்துறை அதிகாரிகள் அரசுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது புதுவை தேர்தல் துறை அதிகாரி அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளில் சட்டமன்ற அலுவலகங்களையும், பூட்டினார். எம். எல்.ஏ.க்களை சட்டமன்ற வளாகத்துகுள்ளேயே வரவிடாமல் தேர்தல் துறை தடுத்தது. ஆனால் தற்போது தேர்தல் அறிவிப்புக்கு பிறகு சட்ட மன்றத்தில் உள்ள முதல்-அமைச்சர் அறை மற்றும் கேபினட்அறை தேர்தல் அலுவலமாக மாறி செயல்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர்.

எனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டின்படி முதல்-அமைச்சர்அறை மற்றும் கேபினட் அறையை மூட வேண்டும். இதுதொடர்பாக எங்கள் கட்சி தலைமையின் அனுமதி பெற்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளோம்.

அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் இடையேயான பனிப்போரில் எம்.எல்.ஏ.க்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. கவர்னர் தன்னிச்சையாக, பொது பணித்துறை, மின்துறை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகளை அழைத்து பேசுகிறார். பல்வேறு தொகுதிகளுக்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களை அழைக்காமலேயே திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார். கவர்னரின் செயலால் எம்.எல்.ஏ.க்களின் உரிமைகள் பறிக்கப்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News