செய்திகள்

தீர்ப்பை கேட்டு தப்பியோடிய வக்கீல் கோர்ட்டில் சரண்: வேலூர் ஜெயிலில் அடைப்பு

Published On 2016-10-05 07:56 GMT   |   Update On 2016-10-05 07:56 GMT
திருவண்ணாமலை கோர்ட்டில் இருந்து தப்பியோடிய வக்கீல் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் வக்கீலை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மொழி (வயது 28), வக்கீல். இவர் மீது அந்த பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக திருவண்ணாமலை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 30-ந் தேதி வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மகளிர் நீதிமன்ற நீதிமதி மேரிஆன்சலம் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல் அருள்மொழிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்தார்.

இந்த தீர்ப்பை கேட்டதும் வக்கீல் அருள்மொழி அங்கிருந்து நைசாக வெளியேறி தப்பி ஓடிவிட்டார். இதையறிந்த போலீசார் கோர்ட்டு வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வக்கீல் அருள்மொழியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வக்கீல் அருள்மொழி நேற்று திருவண்ணாமலை ஜே.எம்.-2 கோர்ட்டில் சரண் அடைந்தார். ஜே.எம்.-2 மாஜிஸ்திரேட்டு இளங்கோ வக்கீல் அருள்மொழியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து வக்கீல் அருள் மொழி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Similar News