செய்திகள்
சென்னை கொட்டிவாக்கத்தில் ஐ.ஸ். இயக்கத்தை சேர்ந்த சுவாலிக் முகமது தங்கியிருந்த வீடு

சென்னை கொட்டிவாக்கத்தில் தங்கி இருந்து 6 ஆண்டுகளாக சதி திட்டம் தீட்டிய தீவிரவாதி

Published On 2016-10-04 05:58 GMT   |   Update On 2016-10-04 06:05 GMT
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கேரள மாநிலம் திருச்சூர் வெங்கநல்லூரை சேர்ந்த சுவாலிக் முகமது சென்னை கொட்டிவாக்கம் அருகே குடும்பத்தோடு வசித்து வந்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

கேரள மாநிலம் கண்ணூர் கனகமலை பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கேரள மாநிலம் திருச்சூர் வெங்கநல்லூரை சேர்ந்த சுவாலிக் முகமது (26)வும் ஒருவர்.

இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள அன்னை சத்யா நகரில் குடும்பத்தோடு வசித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

குணசேகர் என்பவரின் வீட்டில் மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு இவர் குடியிருந்து வந்தார். இது பற்றி அறிந்ததும் கேரளாவில் இருந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னைக்கு விரைந்தனர். கொட்டிவாக்கம் சென்ற அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதி சுவாலிக் முகமது தங்கி இருந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது மனைவி ஜிம்சின்னா (24), 2½ வயது மகன் ஜின்னா ஆகியோர் வீட்டில் இருந்தனர். ஜிம்சின்னாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

ஜிம்சின்னா கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுவாலிக் முகமது, இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது பற்றிய தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஜிம்சின்னா கூறியுள்ளார்.

அப்போது அவரிடம் சுவாலிக் முகமதுவின் தீவிரவாத தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு ஜிம்சின்னா, சரியான பதிலை தெரிவிக்கவில்லை. தனது கணவர் சுவாலிக் முகமதுவின் தீவிரவாத நடவடிக்கைகள் பற்றிய பெரும்பாலான கேள்விகளுக்கு ஜிம்சின்னா தெரியாது என்றே பதில் அளித்துள்ளார்.

பள்ளிப்படிப்பு வரை மட்டுமே படித்துள்ள சுவாலிக் முகமது, கடந்த 2010-ம் ஆண்டு முதல் சென்னையில் தங்கி இருந்துள்ளார். தனியார் நிறுவனங்கள் பலவற்றில் பணிபுரிந்துள்ள அவர், சென்னையில் பல்வேறு இடங்களில் லாட்ஜுகள் மற்றும் மேன்சன்களிலும் வசித்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக சுவாலிக் முகமது சென்னையில் தங்கி இருந்து நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியுள்ளார்.

கல்லூரி படிப்பை எட்டாத நிலையிலும் கம்ப்யூட்டர் கல்வியை சுவாலிக் முகமது திறம்பட கற்று வைத்திருந்தார். சென்னையில் பணியாற்றுவதற்கு இதுவே அவருக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இதையடுத்து தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக சுவாலிக் முகமது பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் மனைவி ஜிம்சின்னா பிரசவத்துக்காக கேரளா சென்றிருந்தார்.

அப்போது வேறு ஒரு இடத்தில் வீடு பார்த்து தங்கி இருந்த முகமது அந்த வீட்டை காலி செய்து விட்டு நண்பர்களோடு அறைகளில் தங்கி இருந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்னர் குழந்தையுடன் ஜிம்சின்னா சென்னை திரும்பிய போது தான் கொட்டிவாக்கம் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.

கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் மனைவியையும், 2½ வயது மகனையும் வைத்து விட்டு இரவு நேரங்களில் முகமது வெளியில் தங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அவர் எங்கு செல்கிறேன் என்பதை கூறாமல் வெளியூருக்கு செல்கிறேன் என்றே கூறிவிட்டு சென்றுள்ளார்.

தான் பணிபுரிந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு இரவு நேரங்களில் வெளியூர் செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு செல்லும் முகமது சென்னையில் நண்பர்கள் சிலரது அறைகளில் தங்கி இருந்தபடியே இணைய தளங்களில் இரவு முழுக்க மூழ்கி கிடப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

அப்போது நீண்ட நேரம் முகமது செல்போன் மூலமாக சாட்டிங்கில் ஈடுபட்டு பலரிடம் பேசி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மனைவி ஜிம்சின்னாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுவாலிக் முகமது சென்னையை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. விரைவில் நான் வெளிநாடு செல்ல இருக்கிறேன். எனவே நீ குழந்தையோடு திருச்சூர் போய்விடு என்றும் முகமது கூறி இருக்கிறார். இதற்கு முன் கொட்டிவாக்கம் வீட்டை காலி செய்ய திட்டமிட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.

சிரியாவுக்கு சென்று முகமது அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற திட்டமிட்டதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

Similar News