செய்திகள்

சிவகிரியில் ரூ.10 ஆயிரம் முதியோர் பணம் வந்து உள்ளதாக கூறி மூதாட்டியிடம் நூதன மோசடி

Published On 2016-10-01 10:33 GMT   |   Update On 2016-10-01 10:33 GMT
சிவகிரியில் ரூ.10 ஆயிரம் முதியோர் பணம் வந்து உள்ளதாக கூறி மூதாட்டியிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஜீவா வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி குப்பாயி (வயது 77).

இவர் நேற்று மாலை தனது வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க டிப் டாப்பாக உடை அணிந்த ஒரு ஆசாமி மோட்டார் சைக்கிளில் வந்தார். குப்பாயி தனியாக உட்கார்ந்து இருப்பதை பார்த்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

இதன்பிறகு அந்த ஆசாமி குப்பாயியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அப்போது அவர் உங்களது பெயர் குப்பாயி தானே. உங்களுக்கு ரூ. 10 ஆயிரம் முதியோர் உதவிப்பணம் வந்து உள்ளது. இதை நான் பெற்று தருகிறேன்.

இவ்வளவு பணம் யாருக்கும் வந்தது இல்லை. இந்த பணம் உங்களுக்கு கிடைக்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவே ரூ. 1000 மட்டும் கொடுங்கள் என்று கேட்டார்.

இதற்கு குப்பாயி என்னிடம் பணம் எதுவும் இல்லை. ஓய்வூதிய பணத்தை நீங்கள் வாங்கி கொடுத்தவுடன் நீங்கள் கேட்ட பணத்தை அதில் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

ஆனால் அந்த ஆசாமியோ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் தான் முதியோர் பணம் ரூ. 10 ஆயிரம் கிடைக்கும். இல்லை என்றால் அந்த பணம் உங்களுக்கு கிடைக்காது என்று கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய குப்பாயி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ரூ.100, 200 என்று கடன் வாங்கி ரூ.1000-த்தை சேர்த்து அந்த ஆசாமியிடம் கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கி கொண்ட அந்த ஆசாமி, குப்பாயியை என்னுடன் வாருங்கள். பணத்தை உடனே பெற்று கொள்ளலாம் என்று கூறினார்.

இதனால் குப்பாயியும் அந்த ஆசாமியின் மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார். அப்போது அந்த ஆசாமி குப்பாயியிடம் இருந்த செல்போனை வாங்கி அதிகாரிகளிடம் பேசுவது போல நாடகம் ஆடினார்.

பிறகு அந்த செல்போனை குப்பாயியிடம் கொடுக்காமல் தானே வைத்து கொண்ட அவர் ¼ கி மீட்டர் தூரத்தில் உள்ள சிவகிரி பஸ் நிலையம் அருகே சென்றார்.

அங்கு ஒரு இடத்தில் குப்பாயியை இறக்கி விட்ட அந்த ஆசாமி இங்கேயே இருங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரியை பார்த்து பேசி வருகிறேன் என்று கூறி மோட்டார் சைக்கிளில் ஒரு குறுகலான சந்தில் சென்றார். பிறகு வெகு நேரமாகியும் அந்த ஆசாமி வரவில்லை அப்போது தான் குப்பாயி தன்னை அந்த ஆசாமி ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்.

ரூ. 1000 பணம் மற்றும் செல்போனை பறித்த சென்ற ஆசாமி பற்றியும் தான் ஏமாந்தது பற்றியும் குப்பாயி அருகில் வசிப்பவர்களிடம் அழுதபடி கூறி புலம்பினார்.

இந்த நூதன மோசடி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News