செய்திகள்

விமானத்தின் டயர் வெடித்தது: வசந்தகுமார் எம்.எல்.ஏ. உட்பட 72 பயணிகள் தப்பினர்

Published On 2016-09-19 08:00 GMT   |   Update On 2016-09-19 08:00 GMT
சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தின் டயர் வெடித்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த வசந்தகுமார் எம்.எல்.ஏ. உட்பட 72 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தூத்துக்குடி:

சென்னை- தூத்துக்குடி இடையே தனியார் விமான நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை 10.20 மணிக்கும், மாலை 3 மணிக்கும் விமானங்கள் புறப்படுகின்றன. அதே போன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 9 மணிக்கும், மாலை 2.20 மணிக்கும் விமானங்கள் புறப்படுகின்றன.

இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டது. அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உட்பட 72 பேர் பயணித்தனர். அந்த விமானம் காலை 10 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கத் தொடங்கியது. அப்போது விமானத்தின் பின்பகுதியில் உள்ள இடது பக்க டயர் திடீரென வெடித்தது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினர். இதையடுத்து விமானத்தில் இருந்த 72 பயணிகளும் பத்திரமாக இறங்கினர். டயர் வெடித்ததும் விமானத்தை சாமர்த்தியமாக விமானி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல இருந்த விமானம் இயக்கப்படவில்லை. ஆகவே அதில் செல்ல இருந்த பயணிகள் தூத்துக்குடி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தனியார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News