செய்திகள்

சென்னையில் இன்று முதல் 4 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

Published On 2016-09-10 03:05 GMT   |   Update On 2016-09-10 03:05 GMT
சென்னையில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகளை 6 இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகளை 6 இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, பாரத இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 2,696 விநாயகர் சிலைகளை 5.9.2016 அன்று நிறுவி வழிபாடு நடத்திவருகிறார்கள். அவ்வாறு நிறுவப்பட்ட சிலைகளுக்கு காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, சட்டம்-ஒழுங்கினை பராமரித்து வருகிறார்கள்.

இவ்வாறு நிறுவப்பட்ட சிலைகள் 10.9.2016 (இன்று), 11.9.2016, 12.9.2016 மற்றும் 14.9.2016 ஆகிய 4 நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. இதில் பெரும்பாலான சிலைகளை நிறுவியுள்ள இந்து முன்னணி (ராம கோபாலன்), இந்துமக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்), இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதரன்), சிவசேனா (ரவிசந்திரன்) உள்ளிட்ட அமைப்புகள் 11.9.2016 அன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த உள்ளனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலப்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி, விரிவான அறிவுரைகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேற்படி பிரதான விநாயகர் சிலை ஊர்வலங்கள் பின்வரும் அனுமதிக்கப்பட்ட 4 ஊர்வல பாதைகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

1. வடசென்னையில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் முத்துசாமி பாலம் அருகே ஒன்று சேர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே கடலில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும்.

2. மத்திய சென்னை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் வள்ளுவர்கோட்டம் அருகே ஒன்று கூடி சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும்.

3. திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டை அருகே இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஒன்று கூடி பாரதி சாலை வழியாக சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு சென்று கரைக்கப்படும்.

4. தென்சென்னையில் உள்ள விநாயகர் சிலைகள், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி வழியாக நீலாங்கரை பல்கலைநகர் கடலில் கரைக்கப்படும்.

அனைத்து ஊர்வலங்களும் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சிலைகளை கரைப்பதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியிலும், நீலாங்கரை பல்கலை நகர் கடற்கரை பகுதியிலும், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியிலும், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை மற்றும் கார்போரண்டம் யூனிவர்சல் கம்பெனியின் பின்புறம் உள்ள கடல் பகுதி மற்றும் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியிலும், கிரேன்கள் நிறுவப்பட்டு சிலைகளை கடலில் கரைக்க உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு வழக்கமாக அனுமதிக்கப்படும் பாதையில் மட்டுமே இந்த வருடமும் ஊர்வலம் கொண்டு செல்ல மேற்படி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊர்வல பாதையிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய பகுதிகளில் அதிக அளவில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

35 அதிரடிப்படை பிரிவுகள் நகரின் முக்கிய பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் முன்னேற்பாடாக நிறுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 4 கூடுதல் கமிஷனர்கள், 6 இணை கமிஷனர்கள், 22 துணை கமிஷனர்கள், 60 உதவி கமிஷனர்கள் உள்பட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன் சென்னை மாநகரில் 135 இடங்களில் அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சட்டம்-ஒழுங்கு தொடர்பான சச்சரவுகளை உடனுக்குடன் களைந்து, பொது அமைதியை நிலைநிறுத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News