செய்திகள்

சட்டத்திருத்ததுக்கு எதிராக ஐகோர்ட்டில் வக்கீல்கள் உண்ணாவிரதம்

Published On 2016-08-09 10:33 GMT   |   Update On 2016-08-09 10:33 GMT
புதிய சட்டத் திருத்தங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் இன்று காலையில் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

வக்கீல் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்டத் திருத்தங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வக்கீல் காசிராமலிங்கம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதிய சட்டத்திருத்த விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதன்பின்னரும் வக்கீல்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் இன்று காலையில் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் துணை தலைவர் கினிமானுவேல் தலைமையில் வக்கீல்கள் ராமசிவசங்கர், சீனிவாச ராவ், மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த வக்கீல்கள், ‘ஐகோர்ட்டு கொண்டு வந்த புதிய சட்டத்திருத்த விதிகள் முழுவதும் திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்’ என்று கூறினார்கள்.

இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி, ‘சென்னை ஐகோர்ட்டு முன்புள்ள நடைபாதையில் வக்கீல்கள் சிலர் எந்தஒரு முன் அனுமதியையும் பெறாமல், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்கு தொடரவும் அனுமதிக்கவேண்டும்’ என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘வக்கீல்கள் ஐகோர்ட்டு வளாகத்துக்குள் போராட்டம் நடத்தவில்லையே!’ என்று கருத்து தெரிவித்தார். பின் னர் ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ரவீந்திரனை அழைத்து சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

Similar News