செய்திகள்

நாமக்கல்லில் அதிகாரி-மனைவியை கத்தி முனையில் மிரட்டி 22 பவுன் நகை கொள்ளை

Published On 2016-08-05 10:29 GMT   |   Update On 2016-08-05 10:30 GMT
நாமக்கல்லில் ஓய்வு பெற்ற மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரியையும், அவரது மனைவியையும் கத்தி முனையில் மிரட்டி 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற இரண்டு முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாமக்கல்:

நாமக்கல்லை அடுத்த கங்கா நகரை சேர்ந்தவர் குணசீலன் (வயது 61). இவர் நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார். இவரது மனைவி பரிமளா (59). இவரும் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்கள் இருவரும் நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1.40 மணிக்கு வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இவர் எழுந்து பார்த்தார். அப்போது கதவை உடைத்துக்கொண்டு முகமூடி அணிந்து இரண்டு கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் குணசீலனையும், அவரது மனைவி பரிமளத்தையும் கத்தி முனையில் மிரட்டி அவர்கள் அணிந்து இருந்த செயின், மோதிரம், வளையல்கள் உள்ளிட்ட 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு 2 மணிக்கு அவர்கள் அங்கு இருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், டி.எஸ்.பி தாமரைசெல்வன் மற்றும் நாமக்கல் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். மோப்பநாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்தனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News