செய்திகள்

அன்னிய செலாவணி வழக்கின் ஆவணங்களை தினகரன் தரப்புக்கு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-06-25 09:16 GMT   |   Update On 2018-06-25 09:16 GMT
அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை தினகரன் தரப்புக்கு வழங்க எழும்பூர் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #TTVDhinakaran #Foreigncurrencycase

சென்னை:

இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்து அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, டி.டி.வி.தினகரன் மீது 1996-ம் ஆண்டு அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது.

எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனது தரப்பு சாட்சிகள் 17 பேரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும், இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரி, லண்டன் இந்திய தூதரகத்திற்கு அனுப்பிய ஆவணங்களை தனக்கு வழங்கவேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் பொருளாதார கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தினகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், தினகரன் தரப்பு கோரிய ஆவணங்களை எல்லாம் எழும்பூர் கோர்ட்டு வழங்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக விசாரணையில் உள்ள வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


அப்போது, டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, ‘ஒரே பரிவர்த்தனை தொடர்பாக 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த 2 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 2 வழக்குகளையும் விசாரிக்க தடை விதித்துள்ளது’ என்று கூறினார்.

இதையடுத்து 6 மாதங்களுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மட்டும் நீதிபதி ரத்து செய்தார். #TTVDhinakaran #Foreigncurrencycase

Tags:    

Similar News