செய்திகள்

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், இளங்கோவன் பங்கேற்பு

Published On 2017-01-07 09:28 GMT   |   Update On 2017-01-07 09:28 GMT
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரசின் செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.

மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். அகில இந்திய செயலாளர் சின்னாரெட்டி, கர்நாடக மந்திரி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், குமரி அனந்தன், இளங்கோவன், தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன், கார்த்திக் சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், குஷ்பு,

எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், விஜயதரணி, மகளிர் அணி தலைவி ஜான்சிராணி, டி.யசோதா, விஜய இளங்செழியன், செல்வப்பெருந்தகை, பவன் குமார், கோபண்ணா, சிரஞ்சீவி, ஹசீனா சையத், ரூபி மனோகரன், பலராமன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷியம், இரா.மனோகர், வி.ஆர்.சிவராமன், ராபர்ட் புரூஸ் உள்பட அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட சுமார் 200 பேர் பங்கேற்றனர்.



இந்த கூட்டத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவும், மத்திய காங்கிரஸ் கமிட்டி அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய கமிட்டியின் உத்தரவுப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டங்கள் நடத்துவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் எழுத்தாளர் சோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

• பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மோடி அரசு நாட்டு மக்களை கஷ்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. மோடி அரசின் திட்டமிடாத நடவடிக்கை பற்றி மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்.

• தமிழ்நாட்டில் 116 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

• தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

• வார்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

• ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பா.ஜனதா அரசுக்கு விருப்பமில்லை. உண்மையிலேயே ஆர்வம் இருந்திருந்தால் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்திருக்கலாம். இது தொடர்பாக 50 எம்.பி.க்களை கொண்ட அ.தி.மு.க.வும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News