செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தடையை விடுதலை சிறுத்தை வரவேற்கிறது: திருமாவளவன் அறிக்கை

Published On 2016-10-05 09:12 GMT   |   Update On 2016-10-05 11:44 GMT
உள்ளாட்சி தேர்தல் தடையை விடுதலை சிறுத்தை வரவேற்கிறது என்று திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்கிறது.

பழங்குடி மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாதென தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியானவுடன் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுத்தோம்.

காவிரி நீர்ச்சிக்கல் பெரும் கொந்தளிப்பாகியுள்ள இச்சூழலில் அதற்காக ஒருங்கிணைந்து போராட வேண்டிய தமிழகம், உள்ளாட்சித் தேர்தலில் மூழ்கிவிடக்கூடாது என்னும் அடிப்படையிலும், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு, தொகுதி சுழற்சிமுறை ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டுமன்னும் அடிப்படையிலும், உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தோம்.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்திருப்பது சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக அமையுமென்று நம்புகிறோம்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முயற்சியில் ஈடுபடாமல், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு, தொகுதி சுழற்சிமுறை ஆகியவற்றை உரியமுறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்து தேர்தலை நடத்தவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ‘தன்னதிகாரம் கொண்ட ஒரு அமைப்பாக’ இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News