என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை.
    • தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன். காங்கிரஸ் கட்சி மேலிடம்தான் இது தொடர்பாக முடிவு செய்யும் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில், தற்போது மீண்டும் 5 வருட முதலமைச்சர் பதவிக்காலத்தை நிறைவு செய்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 7-ந்தேதியுடன் அதிக காலம் கர்நாடக மாநில முதல்வராக இருந்த தேவராஜ் உர்ஸ் சாதனையை முறியடிக்க இருக்கிறார். தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். நாளையுடன் கர்நாடக முதல்வராக அதிக நாட்கள் பதவி வகித்தவர் என்ற பெருமையை சித்தராமையா பெற இருக்கிறார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை. இது வெறும் தற்செயல் நிகழ்வுதான். தேவராஜ் உர்ஸ் எத்தனை வருடங்கள் மற்றும் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. இன்று மக்களில் ஆசீர்வாதத்தால், தேவராஸ் உர்ஸ் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    5 வருட பதவிக் காலத்தை நிறைவு செய்வது குறித்து மேலிடம்தான் முடிவு செய்யும். மேலிடம் எப்போது முடிவு செய்யும் என்று எனக்குத் தெரியாது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நம்பிக்கை இல்லையென்றால், நான் எப்படி முதலமைச்சராகியிருப்பேன்?.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
    • வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டினர்.

    கர்நாடகாவின் ஹூப்ளியில் 13 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஹூப்ளி-தார்வாட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

    இவர்கள் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் சிறுமியை அணுகி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று இந்த ஈடுபட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அதை வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டியதாக சிறுமியின் பெற்றோர் புகாரில் தெரிவித்தனர். இதனால் சிறுரவர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.   

    • பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
    • 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள்.

    மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு 'விபி ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியது.

    மேலும் திட்டத்தில் பல்வேறு திருத்தங்களையும் கொண்டு வந்து மசோதா நிறைவேற்றி அது சட்டமாகவும் மாறியது.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா,

    "மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஏழைகள் மற்றும் சிறு விவசாயிகளுக்காக வேலை செய்யும் உரிமையைக் கொண்டு வந்தார்.

    இப்போது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், சர்வாதிகாரப் போக்கோடு இந்த விபி ஜி ராம் ஜி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

    நாடாளுமன்றத்தில் டிசம்பர் 17-ல் கொண்டு வந்து, அடுத்த நாளே விவாதம் இன்றி இந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

    பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.

    முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.

    பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.

    ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

    இந்த விபி ஜி ராம் ஜிசட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய 100 நாள் வேலைத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.

    வேளாண் சட்டங்களைப் போராடித் திரும்பப் பெற வைத்தது போல, இந்த மக்கள் விரோதச் சட்டத்தையும் திரும்பப் பெற வைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார். 

    • ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.
    • இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பணி முடித்து வீடு திரும்பிய பெண் மருத்துவரை நபர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏஜிபி லேஅவுட்பகுதியில், நள்ளிரவில் வேலை முடிந்து விடுதிக்குத் நடந்து சென்று கொண்டிருந்த 28 வயது பெண் மருத்துவரிடம் ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.

    பின்னர் மருத்துவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார். மருத்துவர் சத்தமிடவே, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சோலதேவனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  

    • பா.ஜ.க. எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டி வீடு முன் காங்கிரஸ் சார்பில் பேனர் வைக்கப்பட்டது.
    • இதைக் கண்ட ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் அதை கிழித்து அகற்றினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெல்லாரி டவுன் பகுதியில் வால்மீகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டது.

    அதேபோல, முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏவுமான ஜனார்த்தன ரெட்டியின் வீடு முன்பும் காங்கிரஸ் சார்பில் பேனர் வைக்கப்பட்டது. இதைக் கண்ட ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் அதை கிழித்து அகற்றினர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராபாத்ரெட்டி தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து பா.ஜ.க.வினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது நாராபாத்ரெட்டியின் ஆதரவாளரான சதீஷ் ரெட்டி திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் காங்கிரஸ் பிரமுகரான ராஜசேகர், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார். அவரை யார் சுட்டுக்கொன்றது என தெரியவில்லை.

    இதனால் அங்கு மோதல் வெடித்தது. இதில் ஜனார்த்தன ரெட்டி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை சிலர் உடைத்ததால் பதற்றம் அதிகமானது.

    தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அங்கு தடியடி நடத்தினர். கூட்டம் கலையாததால் போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக புரூஸ் பீட் போலீசார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, மாநகராட்சி உறுப்பினர் மோத்கர் ஸ்ரீனிவாஸ், பிரகாஷ், ரமணா, பழன்னா, திவாகர், மாருதி பிரசாத், தம்மூர் சேகர், ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பர் அலிகான் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பெல்லாரி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    • இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
    • இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.

    அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.

    அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.

    ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது. 

    குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  

    • கோகிலு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிசம்பர் 20-ம் தேதி அகற்றப்பட்டன.
    • மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் யலஹங்கா கோகிலு பகுதியில் பக்கீர் காலனி, வசீம் லே அவுட் ஆகிய இடங்களில் பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிசம்பர் 20-ம் தேதி அகற்றப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில், கோகிலுவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு நடவடிக்கையின்போது இடிக்கப்பட்ட உண்மையான நபர்களுக்கு மாற்று வீடுகளை வழங்குவதற்கான மாநில அரசின் முடிவை கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே. சிவகுமார் இன்று ஆதரித்தார். அதே நேரத்தில் திருப்திப்படுத்தும் அரசியல் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.

    அந்த வீடுகளில் வசித்தோருக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. தகுதியானவர்களுக்கு நிச்சயம் வீடு கிடைக்கும். அதுவரை அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். ஆக்கிரமிப்புகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இல்லை.

    ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பிறகு தகுதியுள்ள உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே நிவாரணம் என்பது மனிதாபிமான நடவடிக்கை என வலியுறுத்திய அவர், சட்டவிரோத ஆக்கிரமிப்பு இடங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு விரைந்து நிவாரணம் வழங்கவேண்டும் என சில பா.ஜ.க. தலைவர்களும் சில பிரிவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    • பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா பகுதியில் உள்ள கோகிலு லேஅவுட், பக்கீர் காலனி மற்றும் வசீம் லேஅவுட் ஆகிய பகுதிகளில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

    இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், "வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் புல்டோசர் கலாச்சாரம் இப்போது தென்னிந்தியாவிலும், அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல்" என்று விமர்சித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்து டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் கள நிலவரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் குப்பை கிடங்கு மற்றும் கல் குவாரி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவை. அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றது மற்றும் சுகாதார சீர்கேடு நிறைந்தது.

    நில மாஃபியாக்கள் இது போன்ற குடிசைப்பகுதிகளை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். பெங்களூருவை மும்பை போல குடிசை நகரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    கேரளாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற பினராயி விஜயன் அரசியல் நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே இந்த நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தகுதியுள்ளவர்களுக்கு ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. 

    • நாம் காங்கிரஸ்காரர்கள் என்று அழைக்கப்படுகிறோம்.
    • இந்த வரலாறு மற்றவர்களுக்கு இல்லை. பாஜக-விடம் என்ன வரலாறு இருக்கிறது?

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக VB-G RAM G என்ற சட்ட மசோதாவை பாஜக அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி அடுத்த மாதம் 5-ந்தேதி நாடு தழுவிய மக்கள் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகிறது. இதை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டரக்ள் கொண்டாடி வருகின்றனர்.

    கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் 140-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் தலைவர்கள் அல்ல, வாக்குச்சாவடி மட்டத்தில் பணியாற்றும் தொண்டர்கள்தான் உண்மையான தலைவர்கள். நமது காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

    நாம் காங்கிரஸ்காரர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இந்த வரலாறு மற்றவர்களுக்கு இல்லை. பாஜக-விடம் என்ன வரலாறு இருக்கிறது? நாங்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பிறந்தவர்கள்.

    மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா?. நான் காந்தி பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். அதைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களைக் கொண்டு வெளியிடப் போகிறேன். 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளேன். 70 அலுவலகங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டன. பெங்களூருவில் மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்டிடங்களைக் கட்டப் போகிறோம். இதுகுறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    • பெங்களூருவில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்.
    • புல்டோசர் ஆக்சன் என பினராயி விஜயன் கண்டனம்.

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசைகளை சித்தராமையா அரசு அகற்றியது. இதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புல்டோசன் ஆக்சன் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், "கர்நாடக மாநில விவகாரத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலையிடுவதை தவிர்கக் வேண்டும்" எனப் பதில் அளித்துள்ளார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர்கள், பெங்களுருவை பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். பெங்களுருவில் ஆக்கிரமிப்புக்காரர்கள் குடிசைகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது. பினராயி விஜயன் அவரது மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    சித்தராமையா, அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பதற்கு எதிராக இந்த நடவடிக்கை தேவையானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சு இருப்பதாக தகவல் பரவியது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை கொண்டு வந்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம்.

    இந்தியாவிலேயே முட்டை, கறிக்கோழி உற்பத்தியில் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் திகழ்கிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக முட்டை விலை அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் ஒரு கோழி முட்டை ரூ.8-க்கு விற்பனையாகி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கோழி முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் சிலர் முட்டை சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.

    இதையடுத்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை முட்டைகளை ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்தது. இதையடுத்து பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிவமொக்கா, பல்லாரி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முட்டைகள் மாதிரி சேகரித்து இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் மக்கள் சற்று ஆதங்கப்பட்டனர். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை கொண்டு வந்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். அதன் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

    முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது. அதனால் பொதுமக்கள் அச்சமின்றி முட்டையை சாப்பிடலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தகவலை இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் கூறியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாக்ஸ்கான் 30 ஆயிரம் பெண்களை பணிக்கு அமர்த்தியதை ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
    • மேக் இன் இந்தியா திட்டத்தை பாராட்டியதாக ராகுல் காந்திக்கு அமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார்.

    கர்நாடக மாநிலத்தின் சாதனைகளுக்கு பெருமை தேடிக்கொள்வதன் மூலம் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கர்நாடகத்தின் வெற்றியை திருடுகிறார் என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

    மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை அங்கீகரித்தற்காக மக்களவை எதர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

    ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனது புதிய யுனிட்டில் 30,000 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. மேலும், இத்தகைய அளவில் மற்றும் வேகத்தில் உற்பத்தி வளரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியதன் மூலம் முன்மாதிரியாகத் திகழ்ந்த கர்நாடகாவைப் பாராட்டி ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு அஷ்வினி வைஷ்ணவ் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் சித்தராமையா, "மேக் இன் இந்தியா உண்மையாக வெற்றி பெற்றிருந்தால், கர்நாடகா அரசு செய்த சாதனையை, பாஜக ஆளும் இரட்டை என்ஜின் மாநிலங்களால் ஏன் செய்ய முடியவில்லை. எங்களால் சாதனையை காட்ட முடியாதபோது, நீங்கள் மற்றவர்களின் வெற்றியை திருடி, பெருமையை எடுத்துக் கொள்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான பாக்ஸ்கான், சீனாவுக்கு வெளியே பெங்களூரு அருகே தேவனஹல்லியில் மிகப்பெரிய தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஐ-போன் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக பாக்ஸ்கான் திகழ்கிறது.

    ×