லைஃப்ஸ்டைல்

வார இறுதி விடுமுறையை இனிமையாகக் கழிக்க...

Published On 2017-01-06 04:00 GMT   |   Update On 2017-01-06 04:00 GMT
தற்போது, வார இறுதி விடுமுறையை வெளியிடங்களில் கழிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போது, வார இறுதி விடுமுறையை வெளியிடங்களில் கழிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பொருளாதார நிலை உயர்வு, போக்குவரத்து வசதிகள் அதிகரிப்பு போன்றவை இதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன.

ஆனால் ஒரு வார இறுதி விடுமுறையை வெளியிடத்தில் கழிக்கும்போது, அந்த அனுபவம் இனிமையாக அமைய சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

அவை பற்றி...

* நீங்கள் வாரயிறுதியைக் கழிக்க விரும்பும் இடம், மலைவாசஸ்தலமா, கடற்கரைத் தலமா, கலை, கலாச்சாரம் சார்ந்த இடமா, கோவில் நகரமா என்று முன்கூட்டியே முடிவு செய்துவிடுங்கள். சாகசப் பிரியர்கள் அதற்கேற்ற இடங்களையும், உணவுப் பிரியர்கள் அதற்கேற்ற இடங்களையும் தேர்வு செய்யலாம்.

* வாரயிறுதிப் பயணம் என்பது ஒன்றிரண்டு நாள் கொண்டதாகவே இருக்கும் என்பதால், உங்கள் ஊருக்கு அருகில் உள்ள இடங்களைத் தேர்வு செய்யுங்கள். இல்லாவிட்டால், போக்குவரத்தே அதிக நேரத்தை விழுங்கிவிடும்.

* கோடை விடுமுறை சுற்றுலா போன்ற நீண்ட சுற்றுலாவுக்கு எப்படித் திட்டமிடுகிறோமோ, அதேபோல வாரயிறுதிச் சுற்றுலாவுக்கும் முன்கூட்டியே திட்டமிட்டு, தங்குமிடம் போன்றவற்றுக்கு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். ‘ஒருநாள்தானே... அங்கு போய் இறங்கி பார்த்துக்கொள்ளலாம்’ என்ற வேலையெல்லாம் வேண்டாம்.

* சுற்றுலா தொடர்பான ஆலோசனை, முன்பதிவுக்கு உதவும் பல வலைதளங்கள் தற்போது உள்ளன. அவற்றைக் கொஞ்சம் அலசினால், நமது போக்கு வரத்து, தங்குமிடச் செலவில் மிச்சம் பிடிப்பதற்கு உதவக்கூடும்.

* ஒவ்வொரு இடம், தங்கும் விடுதிகள் பற்றிய ‘மதிப்பீடு’களையும் ஆன்லைனில் பார்ப்பது பலன் தரும். சமீபத்திய மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

* மக்கள் கூட்டம் குவியும் வழக்கமான இடங்கள் தவிர்த்து புதிய, உங்கள் ரசனைக்கு ஏற்ற எளிய இடங்களுக்கும் செல்லலாம். ஆனால் அவை குறித்து போதுமான தகவல்களை முன்கூட்டியே திரட்டிக்கொள்ளுங்கள். அங்குள்ள வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

* உங்கள் ‘பட்ஜெட்’டுக்கு ஏற்ப வாரயிறுதி சுற்றுலா அமையட்டும். இல்லாவிட்டால், நீங்கள் மனமகிழ்ச்சிக்காகத் திட்டமிடும் வார யிறுதிச் சுற்றுலாவே உங்களுக்கு மனவலியை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடும்.

* கடைசியாக, நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்தும் வாரயிறுதி விடுமுறைப் பயணத்தை மேற்கொள்ளலாம். அதனால், போக்கு வரத்து, தங்குமிடச் செலவைப் பகிர்ந்துகொள்வது, மகிழ்ச்சியைக் கூட்டிக்கொள்வதுடன், எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வையும் பெறலாம்.

Similar News