லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கு வரும் குதிகால் வலி

பெண்களுக்கு வரும் குதிகால் வலி

Published On 2019-08-19 06:31 GMT   |   Update On 2019-08-19 06:31 GMT
‘காலை எழுந்ததும் படுக்கையைவிட்டு, தரையில் காலை வைக்கவே முடியலை, குதிகால்வலி உயிர் போகுது’ என்று நிறைய பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
‘காலை எழுந்ததும் படுக்கையைவிட்டு, தரையில் காலை வைக்கவே முடியலை, குதிகால்வலி உயிர் போகுது’ என்று நிறைய பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். சரியாக நடக்க ஒரு அரை மணி நேரமாவது ஆகிவிடும். இது பொதுவாக பெண்கள் மட்டுமே சொல்லும் புகார். அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த குதிகால் வலி வருகிறது?

‘‘குதிகாலில் வரும் இந்த வலியை Plantar fasciitis என்று சொல்வோம். அதாவது, பாதத்தின் அடிப்பகுதியில் குதிகால் எலும்பையும், கால்விரல்களையும் இணைக்கும் Plantar fascia எனப்படும் தடிமனான திசுநார்ப்பகுதி வீக்கமடைவதால் இந்த வலி உண்டாகிறது.

பெண்களைப் பொருத்தவரையில், கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடுதல், உடல்பருமன் நோய் காரணமாக தீடீரென்று உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக வீட்டை பராமரிக்கும் பெண்மணிகள் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, உடல்பருமன், தைராய்டு நோய்களின் காரணமாக உடல் எடை கூடுவது போன்ற காரணங்களாலும் Plantar fasciitis இவர்களை அதிகம் பாதிக்கிறது.

அறிகுறிகள்

முதலில் குதிகால் வலி என்றுதான் வருவார்கள். அதற்குப்பின்னால் உடலில் இருக்கும் பிற பிரச்னைகள் தெரிய வரும். பெரும்பாலும் காலையில் எடுத்து வைக்கும் முதல் அடியில் இந்த குத்தல் வலி ஏற்படும். நடக்க, நடக்க வலி குறைந்து போனாலும், நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ, நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நின்றாலோ திரும்பவும் வலிக்க ஆரம்பித்துவிடும். அவர்களுக்கே தெரியாமல் இடது பக்கமாக சாய்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். போகப்போக இரண்டு பக்கமுமே பாதிப்படையும். பாதத்தில் வலி இருப்பதால், நடப்பதை தவிர்ப்பார்கள். இதனால், எடைகூடி வலி அதிகரிக்கும்.

சிகிச்சை

Plantar fasciitis பிரச்னைக்கு சிகிச்சை காலுக்கு பயிற்சி கொடுப்பதுதான். படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் முன்னால் பாதங்களை நன்றாக மசாஜ் செய்யலாம். ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்து காலை அதில் ஊற வைக்கலாம். 2 கப்புகள் எடுத்துக் கொண்டு, ஒன்றில் வெந்நீரும் மற்றொன்றில் குளிர்ந்த நீரும் நிரப்பிக் கொள்ள வேண்டும். முதலில் சுடுநீரில் 1 நிமிடம் வரை வைத்திருந்து, காலை வெளியே எடுத்து நன்கு துடைத்துவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் காலை 1 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி 5 அல்லது 6 தடவைகள் வரை செய்யலாம். அதிகவலி இருப்பவர்கள், அதிகபட்சமாக 3 நிமிடம் வரையிலும் இரண்டு தண்ணீரிலும் மாற்றி ஊறவைக்கலாம். காலுக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

முன்பெல்லாம் வலியைக் குறைக்க பாதத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்துவார்கள். அதனால் பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் இப்போது பயன்படுத்துவதில்லை. அதிக வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவது மற்றும் நடப்பதை குறைத்துக் கொள்வது, எடை குறைப்பு நடவடிக்கை, நீரிழிவு கட்டுப்பாடு போன்று சின்னச்சின்ன வாழ்வியல் மாற்றங்கள் செய்வதன் மூலம் வலியிலிருந்து விடுபடலாம்.

இதைத்தவிர, காலணிகளில் மாற்றங்களும் செய்யலாம். கால்விரல்களை பிரிக்கும் ஸ்பிலின்டுகள் (Night Splints) உள்ளன. இரவில் படுக்கும்போது இதை அணிந்து கொள்வதால் தசைநார்களின் இறுக்கத்தை குறைக்கும். மேலும் கால்வலிக்கென்றே Arch வைத்த பிரத்யேகமான காலணிகள் உள்ளன.
Plantar Fasciitis பிரச்னையைப் பொருத்தவரை மூன்று முக்கிய அம்சங்களை கடைபிடிக்க வேண்டும்.

செயல்முறை நடவடிக்கைகள், வாழ்வியல் மாற்றங்கள், மற்றும் பிஸியோதெரபி பயிற்சிகள் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இவற்றை 6 மாதங்கள் வரை பின்பற்றி வந்தால் வலி பூரண குணமாகிவிடும். 6 மாதங்களுக்குப்பின்னும் வலி தொடரும் பட்சத்தில் மட்டுமே அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்
Tags:    

Similar News