லைஃப்ஸ்டைல்

தானம் ஒன்று பார்வை இரண்டு

Published On 2016-11-07 05:08 GMT   |   Update On 2016-11-07 05:08 GMT
கண் தானம் அளித்து நம் மரணத்திற்குப்பின் இரண்டு பேருக்கு பார்வை கிடைக்க நாமும் காரணமாவோம்..!
இறந்தபின் ஒருவரிடம் இருந்து பெறப்படும் கண்களைக் கொண்டு இரண்டு பேருக்கு பார்வை தரமுடியும். அந்த பார்வை அவர்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதனால் தான் கண் தானத்தை சிறந்த தானமாக சொல்கிறார்கள். இந்தியாவில் 1.5 கோடி பேர் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். 5.2 கோடி பேர் பார்வை குறைபாடு காரணமாக இருளில் இருக்கிறார்கள்.

இவர்களில் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் குழந்தைகளாக இருக்கிறார்கள். இந்த பார்வை குறைபாடு உடையவர்களில் 46 லட்சம் பேர் கார்னியா என்ற விழிவெண்படல பாதிப்பு உடையவர்கள். இவர்கள் தான் கண் தானத்தின் மூலம் பெறப்படும் கண்களைக் கொண்டு பார்வையை பெறமுடியும்.

இந்த கார்னியா பாதிப்பு உள்ளவர்களில் 90 சதவீதம் பேர் 45 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அதிலும் 60 சதவீதம் பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இவர்களைத்தான் கண் தானம் மூலம் பார்வை பெற வைக்கமுடியும். ஒருவர் இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றி, பார்வையற்ற இருவருக்கு பொருத்தி கண் பார்வையை கொண்டு வர முடியும்.

இதுபோக கண்கள் மருத்துவ ஆராய்ச்சிக்கும் பயன்படும். கார்னியா என்பது கண்ணுக்கு முன்புறம், கரு விழிக்கும் முன்னால் நிறமே இல்லாமல், ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய வகையில் ரத்தக்குழாய்கள் எதுவும் இல்லாத ஒரு மெல்லிய திசு. கண்ணுக்கு கண்ணாடி ஜன்னலைப் போல் கார்னியா எனப்படும் விழிவெண்படலம் அமைந்துள்ளது.

கண் பார்வைக்கு மிக அவசியமான இந்தக் கார்னியா, விபத்து, தொற்று நோய்க் கிருமிகள், ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படும். பிறவிக்கோளாறு, பரம்பரை குறைபாடு காரணமாகவும் கார்னியா பாதிக்கப்படலாம். கார்னியாவில் பாதிப்பு ஏற்பட்டால் ஒளிக்கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது. இதனால் விழித்திரையில் பிம்பம் படுவதில்லை. அதனால் தான் பார்வை தெரிவதில்லை.

கண்ணைப் பொறுத்தவரை கார்னியா மிக முக்கிய உறுப்பாக உள்ளது. கண் தானத்தை ஒரு வயது நிறைவடைந்த குழந்தை முதல் வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். தானமாக கிடைத்த கண்களைக் கொண்டு பார்வையிழந்த அனைவருக்கும் பார்வை கொடுக்க முடியுமா என்றால் அது முடியாது.

கண் புரை, க்ளாக்கோமா எனப்படும் கண் நீர் அழுத்த நோய், கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய் உள்பட பல்வேறு காரணங்களால் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும், பார்வை இழந்தவர்களுக்கும் கண் தானம் மூலம் மீண்டும் பார்வையை கொண்டு வர முடியாது. கார்னியா என்ற விழிவெண்படலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பார்வையை திரும்பத் தரமுடியும்.

அதனால் தான் மருத்துவர்கள் கண் தானம் மூலம் கிடைக்கும் கண்ணை பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு, கண் மாற்று அறுவை சிகிச்சை என்று பெயர் சொல்வதில்லை. அதற்கு விழிவெண்படல மாற்று சிகிச்சை என்றே சொல்கிறார்கள். எனவே கண் தானம் அளித்து நம் மரணத்திற்குப்பின் இரண்டு பேருக்கு பார்வை கிடைக்க நாமும் காரணமாவோம்..! கண் தானம் செய்வோம்..!

Similar News