லைஃப்ஸ்டைல்

ஆட்டிஸம் குழந்தைகளிடத்தில் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்

Published On 2017-04-27 06:54 GMT   |   Update On 2017-04-27 06:54 GMT
ஆட்டிஸம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பொதுவாக தனிமையை விரும்பும் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தை மிகவும் சமர்த்து என எண்ணி, அறிகுறிகளைப் புறக்கணிக்க கூடும்.
எல்லோரையும் விட பெற்றோருக்குத்தான் தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக நன்றாகத் தெரிந்திருக்கும். தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டாலோ, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அதை உடனடியாக மருத்துவரின் கவனத்துக்கு கொண்டு சென்று தெளிவு பெற வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சி மைல்கற்களை அடைவதில் சற்றே வித்தியாசங்கள் இருப்பது சகஜம்தான்.

ஆனால், பொதுவாக, “தானாக சரியாகிவிடும்”, ‘‘பொறுத்திருந்து பார்க்கலாம்”, போன்ற வாசகங்களைக் கேட்டு தாமதிக்காமல் சந்தேகத்தைத் தெளிவு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில், குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடிக்கப்படும் இவ்வித குறைபாடுகளுக்கு தாமதிக்காமல், சரியான நேரத்தில் ஆரம்பக்கட்ட சிகிச்சை மேற்கொண்டால், அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம். ஆட்டிஸத்தை 2 வயதுக்கு முன் கண்டறிவது கடினம்.

ஆனால், 12-18 மாதங்களிலேயே இதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். ஆட்டிஸம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பொதுவாக தனிமையை விரும்பும் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தை மிகவும் சமர்த்து என எண்ணி, அறிகுறிகளைப் புறக்கணிக்க கூடும். ஆகவே, பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி பார்ப்போம்.



1. தாய் பாலூட்டும் போது, குழந்தை தாயின் கண்களைப் பார்க்காது.

2. முகம் பார்த்து சிரிக்காது.

3. பெயரைச் சொல்லி அழைக்கும் போது திரும்பிப் பார்க்காது.

4. கண்ணில் படும் பொருட்களை ஆர்வமாக பின்தொடர்ந்து செல்லாது.

5. டாட்டா காட்டி கையசைக்காது.

6. பிறர் கட்டியணைத்தாலும், எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது.

7. பிறர் செய்யும் முகபாவனைகள் மற்றும் செயல்பாடுகளை திரும்ப செய்து பார்க்காது.

8. பிறரின் கவனத்தை ஈர்க்கும்படி எதுவும் செய்யாது (தூக்கச் சொல்லாது, ஒலி எழுப்பி தன்னைப் பார்க்க வைக்காது)

9. மற்றவர்களுடன் விளையாட எத்தனிக்காது.

10. பிறரிடம் சைகையில் பேச எந்த முயற்சியும் செய்யாது.



ஆரம்பக்கட்ட முக்கிய அறிகுறிகள் :

1. ஆறு மாதம்: மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சிரிக்காமல் இருப்பது.

2. ஒன்பது மாதம்: ஒலியை ஏற்படுத்தி பிறருடன் சிரித்து விளையாடாமல் இருப்பது/முகபாவனைகள் செய்யாமல் இருப்பது.

3. 12 மாதம்: 1) பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காதது.

2) மழலைப் பேச்சு பேசாமல் இருத்தல்.

4. 16 மாதம்: கொஞ்சம் கூட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.

5. 24 மாதம்: அர்த்தமுள்ள இரண்டு வார்த்தை சொற்றொடர்களை தானே உருவாக்கி பயன்படுத்த தெரியாமல் இருத்தல்.

மேலே பார்த்த வளர்ச்சி மைல்கற்களில் தாமதம் ஏற்பட்டால், உடனே குழந்தையை மனநல வல்லுநரிடம் ஆய்வுக்கு அழைத்து செல்வது மிகவும் அவசியம். ஒருசில அறிகுறிகளை வைத்து குழந்தைக்கு ஆட்டிஸம் உண்டு என கணித்து விட முடியாது. பல அறிகுறிகள் ஒருசேர இருந்து குழந்தையின் பேசும் திறன், சமூகத்திறன், கல்வித்திறன், விளையாட்டு, தினசரி செயல்பாடுகள் போன்றவற்றைப் பாதிக்கும் போதுதான் அது ஆட்டிஸமாக இருக்கக்கூடும்.

தேர்ச்சி பெற்ற வல்லுநர் பரிசோதித்து பார்த்தப் பின்னர் குழந்தைக்கு பல்வேறு விதமான ஆய்வுகள் செய்யப்படும். அதன் பிறகே, குழந்தைக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் அறிவுத்திறன் (மினி) சராசரி மற்றும் சராசரிக்கு மேலேகூட இருக்கும். இவர்கள் கணித கணக்கீடுகள், வரைகலை, இசைத்திறன் நினைவாற்றல் போன்ற விஷயங்களில் அபார சக்தியுடன் இருப்பார்கள்.

Similar News