லைஃப்ஸ்டைல்

பெற்றோர்கள் குழந்தையை வழிநடத்துவது எப்படி?

Published On 2017-03-27 08:34 GMT   |   Update On 2017-03-27 08:34 GMT
குழந்தைகளுக்கு பிடிக்காத ஒன்றை அவனிடம் திணித்து அவனும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போய்விடும்.
நமது ஆசைகளை அல்லது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் குழந்தையைப் பார்க்கிறோம். கேட்கும்போதே நீ டாக்டரா அல்லது என்ஜீனியரா என்றுதான் கேட்கிறோம். எல்லோரும் டாக்டர், என்ஜீனியராகிவிட்டால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. டாக்டராக வேண்டும் என்று அவன் விரும்பினால் அதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவனை டாக்டராக்கிக் காட்டுங்கள்.

அவன் விளையாட்டு வீரராக வேண்டும், இசைக் கலைஞர் ஆகவேண்டும் என்று விரும்பினால் அதற்குத் தடை போடாதீர்கள். 5 விரல்களும் ஒன்றாக இருப்பது இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உண்டு. சில குழந்தைகளுக்குக் கற்பதில் குறைபாடுகள் (learning disablity) இருக்கும். அதைச் சரி செய்யுங்கள். எதில் திறமை உள்ளது எனக் கண்டறிந்து அதில் "நம்பர் ஒன்' ஆக்குங்கள்.

அதைவிட்டுவிட்டு, அவனுக்குப் பிடிக்காத ஒன்றை அவனிடம் திணித்து அவனும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போய்விடும். நமது குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகள் உண்டு என்பதை பெற்றோர் உணரவேண்டும். அட நாங்க என்ன, அவனுக்குக் கெடுதலா பண்ணப்போறோம் என்று பல பெற்றோர் திருப்பி கேள்வி கேட்கலாம்.



நிச்சயமாக எந்தப் பெற்றோரும் குழந்தைக்குக் கெடுதல் செய்ய நினைப்பதில்லை. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. குழந்தையின் அறிவாற்றல், இயல்பான திறமை, அவனது விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப பாதை அமைத்துக் கொடுங்கள். நிச்சயமாக சாதித்துக் காட்டுவான். இதில் தவறு செய்யும்போதுதான் பல குழந்தைகள் சரியாகப் படிக்காமல் போய்விடுகின்றனர்.

குழந்தை சரியாக படிக்காத நிலையில் பெற்றோர் அதிருப்தி அடைந்து வெறுப்பைக் காண்பிக்கின்றனர். பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச்சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்.

எல்லாக் குழந்தைகளுக்கும் தனிச்சையாக காரியங்களைச் செய்யும் திறமை உண்டு. தனது தேவைகளை தானே செய்து கொள்ள பழக்க வேண்டும். குளிப்பது, சாப்பிடுவது, டிரஸ் போடுவது போன்றவற்றைத் தானே செய்யப் பழக்க வேண்டும்.

அதில் சில தவறுகள் செய்யும்போது பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும். உனக்கு ஒன்னுமே வராது. நீ உருப்பட்ட மாதிரிதான் என்று சொல்லி பிஞ்சு உள்ளத்தை காயப்படுத்தாதீர்கள். குழந்தையைப் பற்றி கணவர் மனைவிடமும், மனைவி கணவரிடமும் குறை கூறி பேசக் கூடாது. கணவன் - மனைவி இருவரும் ஒருமித்து செயல்பட்டு உனது நலனுக்குத்தான் எல்லாம் செய்கிறோம் என்பதை குழந்தையிடம் புரிய வைக்க வேண்டும்.

Similar News