ஆன்மிகம்
மறைஞானசம்பந்தர், உமாபதி

மறைஞான சம்பந்தரின் வரலாறு

Published On 2021-07-02 07:00 GMT   |   Update On 2021-07-02 07:00 GMT
அருணந்தி சிவாச்சாரியாரிடம் சீடராக இருந்தவர், மறைஞானசம்பந்தர். இவர் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் அவதரித்தார். ‘சிவதர்மம்’ என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தை, தமிழில் மொழி பெயர்த்தார்.
அருணந்தி சிவாச்சாரியாரிடம் சீடராக இருந்தவர், மறைஞானசம்பந்தர். இவர் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் அவதரித்தார். ‘சிவதர்மம்’ என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தை, தமிழில் மொழி பெயர்த்தார்.

ஒருமுறை சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சகராக இருந்த உமாபதி சிவம் என்பவர், பூஜைகளை முடித்துக் கொண்டு, மேளதாளத்துடன் வீட்டுக்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். (அந்த காலத்தில் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களை, பல்லக்கில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவது வழக்கம். அப்போது பகலாக இருந்தாலும் கூட பல்லக்கின் முன்னும், பின்னுமாக தீவட்டி ஏந்திச் செல்வார்கள்). அப்போது வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார், மறைஞானசம்பந்தர். அவர் இந்த பல்லக்கு காட்சியைப் பார்த்து விட்டு, “பட்ட மரத்தில் பகல் குருடு போகுது பார்” என்று உமாபதி சிவம் காதில் விழும்படி உரக்கச் சொன்னார்.

கற்பூரத்தின் அருகில் நெருப்பைக் கொண்டு சென்றாலே பற்றிக்கொள்வது போல, மறைஞானசம்பந்தரின் அந்த வார்த்தை உமாபதி சிவத்தின் மனதில் ஞான அக்கினியை பற்றவைத்தவிட்டது. உடனடியாக பல்லக்கில் இருந்து இறங்கியவர், மறைஞானசம்பந்தரின் பாதம் பணிந்து தன்னை சீடரான ஏற்கும்படி வேண்டினார். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினார், மறைஞானசம்பந்தர்.

உமாபதி சிவமும் விடுவதாக இல்லை, அவரைப் பின்தொடர்ந்து சென்றார். ஒரு வீட்டின் முன்பாக நின்ற மறைஞானசம்பந்தருக்கு, அந்த வீட்டில் இருந்து வெளிப்பட்ட ஒருவர், கூழை அவரது கைகளில் பிச்சையாக வார்த்தார். அதை ‘சிவ பிரசாதம்’ என்று சொல்லியபடியே அருந்தினார், மறைஞானசம்பந்தர். அப்போது அவரது கையிடுக்கு வழியாக கூழ் வழியத் தொடங்கியது. அதை தன்னுடைய கையில் ஏந்திய உமாபதி சிவம், ‘குரு பிரசாதம்’ என்று சொல்லியபடி அதை குடித்தார். அது முதல் அவர், மறைஞானசம்பந்தரின் சீடரானார்.
Tags:    

Similar News